Monday, June 15, 2009

மனத்திரை

பாரிஸ். மே 29, 2009:

"கவலை வேண்டாம் திரு. பாட்ரிக். இது ஒரு சிறிய பிரச்னைதான்.... சில வாரங்களில சரியாகி விடும். உங்கள் ஒத்துழைப்பு மட்டும் மிக முக்கியம். முடிந்தால் ஒரிரு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாமே. யோசித்துப் பாருங்கள்... மற்றபடி பயப்படும்படியாக ஏதுமில்லை... மகிழ்ச்சியாக இருங்கள்...."

"நன்றி டாக்டர் கொன்சலெஸ். நீங்கள் இவ்வளவு சொன்னபிறகு எனக்கு இறுக்கம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கிறது. விடுப்பு எடுப்பது பற்றி யோசிக்கிறேன். நன்றி.... "

"சரி.... இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வாருங்கள். அதற்குள் நானும் டாக்டர்.லினர்ட் அப்பாயிண்ட்மென்ட் ஏற்பாடு செய்கிறேன்."

"நன்றி டாக்டர்... வருகிறேன்"

இரண்டு வாரங்களாகவே எனக்கு இந்த வினோதமான பிரச்னை. கனவுகள். இரவில் தூங்கும்போதுதான் என்றில்லை. எந்த நேரத்திலும்... எந்த இடத்திலும்... என்ன செய்து கொண்டிருக்கும்போதும்..... மூளைக்குள் கனவு போல காட்சிகள் ஓடுகின்றன. திடீர் திடீரென்று வந்து... தொந்திரவு அதிகம். பல சமயங்களில் ஓரிரு வினாடிகள் என் சுயகட்டுப்பாட்டை இழந்து மூளைக்குள் நிகழும் காட்சிகளில் நானும் ஒரு பாத்திரமாகி ஏதேதோ விநோதங்கள் நிகழ்ந்து சிலசமயம் பிறர் சிரிக்கும்படியாகவோ முகஞ்சுளிக்கும்படியாகவோ அல்லது அதிர்ச்சியடையும்படியாகவோ ஆகிவிடுகிறது.

அப்படித்தான்... போன மாதம் ஒரு நாள்... பாஸ்தா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வேலைக்குக் கிளம்புவது போல காட்சிகள் வந்து பாஸ்தாவை இடுப்பில் பெல்ட் போல அணிய முயற்சித்து மனைவியும் மகனும் புரையேறும் அளவுக்கு சிரித்தார்கள். முதலில் ஏதோ விளையாட்டாகத் தோன்றினாலும் அடிக்கடி நிகழவே கொஞ்சம் கலக்கமானேன். வேலைக்கு இடையேயும் வர ஆரம்பிக்கவே பயந்துதான் போனேன். பிறகு என் மனைவி தன் நண்பர்களிடம் விசாரித்து.... இதோ இப்போது பாரிஸின் தலைசிறந்த "சைக்கொ அனலிஸ்ட்"டான டாக்டர் வின்சென்ட் கொன்சலெஸ்ஸை சந்தித்து விட்டு வருகிறேன்.

என் பிரச்னையை முழுவதும் கேட்டபின்னர், "சைக்கோ அனாலிசிஸ்" என்று சில "இங்க் ஸ்ப்லாஷ்" படங்களைக் காண்பித்து, அவற்றைப் பார்த்தது மனதிம் முதலில் எழும் நினைப்பை அப்படியே சொல்லச் சொன்னார். நானும் வண்ணத்துப்பூச்சி, கழுகு, மீன் பிடிக்கும் கிழவன்... என்று மனதில் தோன்றியவைகளைச் சொன்னேன். இன்னும் ஏதேதோ கேள்விகள் கேட்ட பிறகு இது ஒரு வகையான "பார்டிஸிபேடிவ் ஹலூசினேஷன்" என்றும் இன்னுமொரு டாக்டரிடமும் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். பார்ப்போம்....

* * *

மனைவி காரை செலுத்திக் கொண்டிருந்தாள். "எனக்கு மட்டும் ஏன்?" என்ற வழக்கமான கேள்வியை மனதுக்குள்ளேயே உருட்டி புரட்டிக்கொண்டிருந்தேன். என் மனைவி "ஃப்ரெண்ட்ஸ்" தொடரின் சில நகைச்சுவைக் காட்சிகளை விவரித்து என்னை சிரிக்க வைக்க முயற்சித்து தோல்வியடைந்து மௌனமானாள்.

கார் ட்ரைவ்-இன் மெக்டொனல்டில் நிற்க நான் இரண்டு பர்கர்கள் ஆர்டர் செய்தேன். ஜன்னலுக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி பர்கரை வாங்கினேன். ஏனோ அவன் பர்கரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். நான் இன்னும் கெட்டியாகப் பிடித்து வாங்க முயற்சி செய்தேன்.

"ஏசுவே.... பார்கோமீட்டரை ஏன் பிடித்து இந்த இழு இழுக்கிறாய்? என்ன ஆச்சு உனக்கு?" மனைவி கத்த.... நான் சட்டென்று விழித்தேன். கைகளை உள்ளே இழுத்துக் கொண்டேன். பாழாய்ப்போன கனவு.....

"என்ன... மறுபடியும் கனவா? சரி. டாக்டர்தான் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாரே? அதையே நினைத்து கவலைப்படாதே......"

காரை விட்டு இறங்கி அசட்டுச் சிரிப்புடன் அவளுடன் கடைக்குள் நுழைந்தேன்.

* * *

மே 30, 2009.

மேலதிகாரியிடம் எவ்வளவோ மன்றாடியும் ஒரு பயனும் இல்லை. ஏற்கெனவே ஆட்கள் குறைவு என்பதாலும், அதுவும் இந்த இரண்டு வாரங்களுக்கான திட்டத்தை மாற்றவே முடியாது என்பதாலும் அதற்குப் பிறகு என் விருப்பம் போல விடுப்பு அளிப்பதாகச் சொல்லி விட்டார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முக்கிய பயிற்சிக்காக என்னைத் தேர்வு செய்து "துலூஸ்"க்கு 2 வாரங்கள் அனுப்பியதை வேறு நினைவு கூர்ந்து கொஞ்சம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். வேறு வழியில்லாமல் நாளைக் காலை வருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். மனைவியின் தோழியின் ஆலோசனைப் படி அரை மணி நேரம் தியானத்தில் அமர்ந்ததில் மனது கொஞ்சம் லேசானது போல் தோன்றியது. எந்த கனவுத் தொந்திரவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். மறு நாள் காலை சீருடைகளை அணிந்து கொண்டு வேலைக்குக் கிளம்பி விட்டேன்.

* * *

மே 31, 2009. இரவு 8 மணி.

போன் மணி அடித்தது.

"ஹலோ.... வியோலா பாட்ரிக் பேசுகிறேன்..."

"ஹலோ... திருமதி பாட்ரிக். நான் டாக்டர் வின்சென்ட். திரு. பாட்ரிக் இருக்கிறாரா? நாளை மாலை 5:30க்கு டாக்டர்.லினர்ட்டை சந்திக்க வேண்டும். உங்கள் கணவரிடம் சொல்லி விடுங்கள். நீங்களும் அவசியம் வர வேண்டும். "

"அவர் இப்போது பாரிஸில் இல்லை. நேற்று காலையில் வேலைக்குப் போனார். அவருக்கு இந்த வாரம் ரியோ-டி-ஜனெரோ வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவுதான் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். நாளைக் காலை வீட்டிற்கு வந்து விடுவார்."

"ஓ..."

"2 மாதங்களுக்கு முன்னால் துலூஸில் மேல்நிலை விமானப் பயிற்சிகள் முடித்த பின்னர் அவருக்கு இந்த நீண்ட தூர வழித்தடங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்..."

"நல்லது... நாளை மாலை 5:30க்கு சந்திப்போம்...."

* * *

பாரிஸ். ஜூன் 1, 2009. காலை 7:30.

வியோலா தான் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் ஓட்மீல் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். திரையில் "சற்று முன் வந்த செய்தி" என்று ஒளிர்ந்தது. கவனித்தாள். "நேற்று இரவு ரியோ டி ஜெனெரோவில் இருந்து பாரிஸுக்குக் கிளம்பிய ஏர் ஃப்ரான்ஸ் விமானம் இடையில் கட்டுப்பாட்டு மையங்களுடனான தன் தொடர்பை திடீரென இழந்தது. பிரேசில் மற்றும் ஃப்ரான்ஸ் விமானப்டை விமானங்கள் தொலைந்து போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்"


"ஏசுவே..... என் பாட்ரிக்......"

* * *


அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு... பிரேசில் நேரம் அதிகாலை 2:15 ....

நான் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நான் குதிரைச் சவாரி செய்து கொண்டிருக்கும்போது எதிரே கருப்பு பூதம் போல திடீரென்று ஏதோ தோன்ற, குதிரையை நிறுத்தும் நோக்கில் நான் வலக்கையில் பிடித்திருந்த லகானை சடாரென்று பின்னால் இழுத்தது லேசாக நினைவிருக்கிறது.

ஆ..... நான் செலுத்திக் கொண்டிருந்த விமானம் என்ன ஆயிற்று? ஐயோ... 216 பயணிகள்.... என் நண்பர்கள் 12 பேர்.... என்ன ஆனார்கள்?? ஏசுவே...........

ஏர் ஃப்ரான்ஸ் பைலட் பாட்ரிக் கார்னியே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி.....


* * *

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.



28 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நட்புடன் ஜமால் said...

சிறப்பா இருக்கு

விருவிருப்பாக ஆழ்ந்து படிக்க முடிந்தது.

வெற்றி பெற வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

கவுண்டமணி ஜோக் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

(கனவு ஜோக் ...)

anujanya said...

வித்தியாசமான களம். அண்மைச் சம்பவம். Completely stressed pilots. இவற்றை மையமாக வைத்து ஒரு 'சிக்' புனைவு. நல்லா வந்திருக்கு மகேஷ். வாழ்த்துகள்.

உங்கள், அலட்டிக்கொள்ளாத, சரளமான நடை பிடிக்கிறது.

அனுஜன்யா

நர்சிம் said...

கரண்ட் அஃபெயர்ல பின்னிட்டீங்க தல.. முதல் 5 இடங்கள்ல ஒன்னு நிச்சயம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை .பரிசு நிச்சயம் துக்ளக்.வாழ்த்துகள்.

Ramanna said...

அருமையான கதை களம். த்ரில்லேர் எண்டிங்.

Mahesh said...

நன்றி ஜமால் பாய்... கவுண்டமணி ஜோக்கா? அவ்வ்வ்வ்வ்வ்....

நன்றி அனுஜன்யா... ஸ்பெஷல் நன்றிகள் !!

நன்றி நர்சிம்.... இது உங்களுக்கே ஓவராத் தெரியலயா? அவ்வ்வ்வ்....

நன்றி ஸ்ரீதர்...

நன்றி ராமண்ணா.... த்ரில்லர் எண்டிங்கா? இப்பிடியே உசுப்பேத்து... நல்லாருப்பா நல்லாரு.....

வெண்பூ said...

கலக்கல் கரு மஹேஷ்... தற்போதைய நிகழ்வுகளைக் கோர்த்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. சூப்பர்.. வெற்றி பெரும் 20 கதைகளில் இன்னொன்னு கன்ஃபர்ம்டு...

கலையரசன் said...

நல்லதான் எழுதுறீங்க.. பெஸ்ட் ஆப் லக்!

எம்.எம்.அப்துல்லா said...

அட!அட!அட!

:)

எம்.எம்.அப்துல்லா said...

அட!அட!அட!

:)

Anbu said...

அருமை .பரிசு நிச்சயம் துக்ளக்.வாழ்த்துகள்.

ஜோசப் பால்ராஜ் said...

ஆஹா...
ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு காரணம் இது தானா?
கருப்புப் பெட்டியெல்லாம் தேவையேயில்லப் போல, கதைப் பெட்டியப் பார்த்தே கேஸ முடிச்சுட்டிங்க.
நல்லக் கற்பனை. நல்லக் கதை. வாழ்த்துக்கள்.

Mahesh said...

நன்றி வெண்பூ...

நன்றி கலையரசன்...

நன்றி அப்துல்லா... அட! அட ! அட!

நன்றி அன்பு...

நன்றி ஜோசஃப்... ஆமாங்க !! அதேதேன் !!

Thamira said...

நல்ல நடை.. ஃப்ளோ.. வேகம். வாழ்த்துகள்.! (நிஜ சம்பவத்தை வைத்து பின்னப்பட்டதுதான் பிளஸ்ஸா மைனஸா.. சொல்லத்தெரியவில்லை)

மங்களூர் சிவா said...

ஹி ஹி இதுதான் மேட்டரா இது தெரியாமத்தான் துப்பி துலக்கிகிட்டிருக்கானுவளா?? ச்ச துப்புதுலக்கிகிட்டிருக்கானுவளா??

:)))

Mahesh said...

நன்றி ஆதி... பிளஸ் மைனஸ் எல்லாம் பாத்தா நான் கதை எழுத முடியாது... ஹி ஹி ஹி...

நன்றி மங்களூர் சிவா.... பாருங்க...என்னயை ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமில்ல?

நசரேயன் said...

நல்லா இருக்கு.. செம வேகம் கதையிலே

Mahesh said...

நன்றி நசரேயன்...

சி தயாளன் said...

ம்...நல்ல கற்பனை..எங்கையோ எல்லாம் கோர்த்து சரியாக கொண்டு வந்து முடிச்சிருக்கிறீங்க...வாழ்த்துகள்..

விஜய் ஆனந்த் said...

:-)))...

நல்லா இருக்கு!!!

Mahesh said...

நன்றி டொன்லீ...

நன்றி விஜய் ஆனந்த்.... இப்பல்லாம் ஸ்மைலி மட்டுமே போடறதில்லை... நல்ல முன்னேற்றம் :)

ஆயில்யன் said...

// Mahesh said...


நன்றி விஜய் ஆனந்த்.... இப்பல்லாம் ஸ்மைலி மட்டுமே போடறதில்லை... நல்ல முன்னேற்றம் :)//


வீட்ல சிரிப்பு சத்தத்தை கம்மியாக்கிட்டதா ஒரு தகவல் வந்துச்சு ! ஒரு வேளை அதுவும் காரணமா இருக்கலாமோ?? :))))))

Kumky said...

வாவ்...நல்ல ப்ளோ மஹேஷ்.
ஒரு விருவிருப்பான தொய்வில்லாத நடை. அருமையான கரு&கதை.பரிசு நிச்சயம்.கண்கிராட்ஸ்.

Mahesh said...

நன்றி கும்க்கி....

ஸ்வாமி ஓம்கார் said...

ஏசுவே...

என கதைக்கு பரிசு போச்சு... :))

வெளியில் நிற்கும் கதை (Outstanding story)..!:)

Mahesh said...

வாங்க ஸ்வாமி.... வெளிய நிக்கற கதையா? போட்டிக்கு வெளியவா? அவ்வ்வ்வ்..........

Xavier said...

பின்னி பெடலெடுத்துட்டீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள். விமானத்துல உட்காந்து யோசிச்சீங்களோ?