Saturday, April 30, 2011

உறங்குவது போலும்........


நண்பருடன் ஒரு சிறிய விவாதம். தூக்கத்தில் நாம் மிகுந்த நேரத்தை விரயம் செய்கிறோம் (non-productive) என்றார். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது அவசியமற்றது ; ஒரு நாளைக்கு 16 மணி நேரம் என்று வாரத்துக்கு 6 நாட்கள் (96 மணி நேரம்) வேலை செய்ய அனுமதிக்கும்படி பணியாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார். இத்தனைக்கும் அவருடையே சகோதரர் ஒரு மருத்துவர்.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்களைப் பற்றி பேசவில்லை. நிஜமாகவே தூக்கம் என்பது நேர விரயமா? மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. இல்லாது போனால், மனித உடல்கூற்றுப் படி, இயக்கமும் உற்பத்தி திறனும் மங்கி, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இறங்கி வளர்ச்சி குன்றிய நாடாகத்தான் போகும்.

அது நிற்க. விவாதம் தொடர்ந்தது. அறிவியல், மருத்துவம் , வானவியல் இவையெல்லாம் வாழ்வியலில் கலக்கும் முன்பிருந்து இருக்கும் வேதம் என்ன சொல்கிறது? ("வேதம்" என்பது, மதம் - குறிப்பாக இந்து மதம் -மற்றும் ஆத்திகம் தொடர்புடையது என்ற கருத்து உடையவர்கள் இந்த வரியுடன் திரும்பி விடலாம்). வேதங்களைப் பொறுத்தவரை மதம், ஆத்திகம் போன்றவை மிக மலிவான விஷயங்கள். அவற்றின் ஆழமும், அகலமும் இந்த பிரபஞ்சத்தை விடவும் அதிகம்.

இன்று அறிவியல் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு பதில் தேட முயன்று கொண்டிருக்கிறது . (இது பற்றிய முந்தைய இடுகை) அறிவியல் முயல வேண்டும். உண்மை என்பது தேடி அறிந்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைய நிலையில் அறிவியலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள பல் செய்திகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே வேதங்களில் இருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமே.

கடவுள் ஒளி உண்டாகட்டும் ; பூமி உண்டாகட்டும் ; உயிர்கள் உண்டாகட்டும் என்று நினைத்தார், படைத்தார் என்பது பரவலான நம்பிக்கை. போலவே, 2012-ல் பிரளயத்தில் (deluge) உலகம் அழியும் ; உலகமே நீரில் மூழ்கி விடும் என்பது போன்ற நம்பிக்கைகளும் பல மதங்களிலும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் வேதமோ, இதையெல்லாம் விடு ; 'நித்யப் பிரளயம்" என்று ஒன்று நாள்தோறும் உனக்குள்ளேயே நிகழ்வது உனக்குத் தெரியுமா என்கிறது. அதுதான் 'தூக்கம்'. எப்படி?

"லயம்" என்றால் ஓய்தல் அல்லது ஒன்றுதல் என்று கூறலாம். நாம் சுய உணர்வுடன் (consciousness) இருக்கும்போது நம் மனதில் உள்ள என்ணங்கள், நாம் தூங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, ஒடுங்கி, ஓய்ந்து, ஒரு புள்ளியில் 'லயித்து' (withdrawn / unmanifest) விடுகின்றன. மறுபடி விழிக்கையில், 'மனம்' என்பதும் அதில் எண்ணங்கள் என்பதும் மறுபடி 'தோன்றி' (manifest) நம் சுய உணர்வின் புலனுக்கு தென்படுகின்றன. (இது பற்றிய முந்தைய இடுகை) நாம் தூங்கி விழிக்கும்போது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இது எங்கிருந்து வந்தது?

இந்தப் பிரபஞ்சத்தில் நம் சுயஉணர்வுக்கு புலப்படும் / புரியும் ஒவ்வொரு பொருளும் அணுக்கள் / துகள்களால் ஆனது என்று அறிவியல் கூறுகிறது. அந்த அணுக்கள் / துகள்களுக்கும் அப்பாற்பட்டதை "வெளி" (field) என்கிறது. அதை அறியத்தான் அறிவியல் முயன்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றை, அந்த ஆனந்தமான அமைதியை, அந்த மூலசக்தியை (energy) வேதம் "பிரம்மம்" என்றும், நம் சுய உணர்வில் புலப்படுவை எல்லாம் அதன் வெளிப்பாடுகளே (manifests) என்றும் கூறுகிறது. தூக்கம் ஒரு வகையான தியானம். நாம் தூங்கும்போது நிகழும் பிரளயத்தில், நம் மனம் அதன் மூலமான சத்தில் லயித்து, மீண்டும் வெளிப்படும்போது புத்துணர்வுடன் வெளிப்படுகிறது. எப்படி கடலில் ஒரு அலை எழுந்து, கடலிலேயே விழுந்து, கடலோடு லயித்து, மறுபடி இன்னொரு அலையாக எழுகிறதோ அதைப் போலவே. எந்த மூலசக்தியின் வெளிப்பாடாக மனமும், எண்ணங்களும் தோன்றினவோ, அதே மூலசக்தியிடம் லயித்து மீண்டும் தோன்றும்போது புத்துணர்வும், அதன் காரணமாக உடலியக்கமும், நமது அன்றாட வாழ்வும் நிகழ்கின்றன. அந்தப் புத்துணர்வு இல்லாமல் உடல் உழைப்பும், உற்பத்தித் திறனும் இல்லை. மனம் ஓயாமல், உடலுக்கு சக்தி கிடைக்காது. புத்துணர்ச்சி பெறுவது என்பதையும் தாண்டி, நம் இருப்பை, இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை நமக்குப் புரிய வைப்பதும் தூக்கமே.

நாம் உணரும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றமும், மறைவும், அதில் உயிர்களின் பிறப்பும், இறப்பும் கூட அந்த மூலசக்தியின் அலைகளே.

"உறங்குவது போலும் சாக்காடு ; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

"புனரபி ஜனனம் ; புனரபி மரணம்"

வால் : இதையெல்லாம் ஒருபுறம். மறுபுறம், பணியாளர் நலன்கள், அது தொடர்பான சட்டங்கள், அடிப்படை பொருளாதார விதிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுதும் வாரத்திற்கு 40 மணி நேரம் பணி என்பது சரியான ஒன்றுதான். மேலும் மேலும் பணி நேரத்தைக் கூட்டுவது பல விதங்களிலும் பாதிப்புதான். Only be counter productive.

9 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

போங்ணே... எனக்கு இன்னைக்கு நித்திரையே காணலை...

Somz said...

Athaavathu... naan enna solla varennaa...
Yes... exactly.. atheythaan! Pinniputtel pongo!

எம்.எம்.அப்துல்லா said...

சித்தமலமறுத்து என்னைச் சிவமாக்கி..

Mahesh said...

@ மணி : இதுக்குதான் நான் எழுதறதையெல்லாம் ராவுல படிக்கக் கூடாதுங்கறது...

@ somz : அதாவது... அதாவது... நான் வந்து... அதாவது...சரி விடு...

@ அப்துல்லா : ...எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

ஷர்புதீன் said...

korr..r.r.r..r.r.

ஸ்வாமி ஓம்கார் said...

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே


:))
நாங்க தூங்கும் கட்சி..! :))

அறிவிலி said...

பாதி படிக்கும்போதே தூங்கிட்டனா, அதான் கமெண்ட் போட இவ்ளோ நாளாச்சு...

Mahesh said...

நன்றி ஷர்புதீன்....

நன்றி ஸ்வாமி ஓம்கார்..... தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே!!!

நன்றி ராஜேஷ்... ஒரு வாரமா தூங்கினீங்க ??!! அதுக்கப்பறமும் ஞாபகமா பின்னூட்டம் போட்டீங்களே.... உங்க கடமை உணர்சியை நினைச்சு...

வெள்ளிநிலா said...

hi boss!

i am the 100th follower of you! what is the gift? apart from your blog....

:)