Saturday, July 31, 2010

நாயம்


காலைல முளிச்சபோதே தெரிஞ்சு போச்சு. இன்னக்கி பொளுது போனாப்புலதான்னு. மானம் வேற கொஞ்சம் மப்பாவே இருந்துச்சு. காந்திராசு சைக்கிளுக்கு சேண்டு போட்டு நிப்பாட்ட முடியாம கன்னுக்குட்டி கட்ற கம்பத்துல சாச்சாப்ல வெச்சுட்டு வந்தான். இவன் எங்க இப்ப இங்கிட்டுன்னு மண்டையை சொறிஞ்சுக்கிட்டே வெளிய வந்தேன்.

செயாவுமு செல்லாளுமு சந்தைக்கி கெளம்பிக்கிட்டுருந்தாங்க. தூக்குப் போசீல டீத்தண்ணி இருந்துச்சு. எனக்குமு, காந்திராசுவுக்குமு கெளாஸ்ல வெச்சுக் குடுத்துப் போட்டு செயா போயிருச்சு. வாயை கொப்புளிச்சுப்போட்டு ரெண்டு பேரும் டீயை குடிச்சுட்டு.....

"அப்பறம்.. .என்ன காலங்காத்தால் இங்கிட்டு?"

"ஒண்ணுமில்ல பரமு.... இன்னைக்கி காலைல சிப்டுக்குப் போனேன். சூப்ரைசரு என்னிய உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி வெச்சுருக்கான். கேட்லயயே திருமூர்த்தி என்னியை முடுக்கி உட்டான். வந்த கோவத்துக்கு கன்னத்தைச் சேத்தி 'ரை'ன்னு ஒண்ணு உடலாமான்ட்டு இருந்துச்சு... .செரி... இவனை அடிச்சு என்ன புண்ணியம்னு... ஓசனையோடவே இங்க வந்தேன்..."

"இந்த கோவந்தான் உனக்கு எமென்... ப்ரொடக்சன் மேனேசர் என்ன பண்ணா உனக்கென்ன? அவன் பளனியப்பனை சஸ்பெண்டு பண்ணினா உன்னியை யாரு போய் நாயங் கேக்கச் சொன்னது? அதான் மணியண்ணன் கேக்கறம்னு சொன்னாரல்ல? உங்கிட்ட பளனி வந்து சொன்னானா? வேலீல போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுக்கிட்டு... அப்பறம் குத்துது கொடையுதுன்னா... ஹ்ம்ம்???"

"நீயுமு இப்பிடிப் பேசுனா....?"

"பின்ன? நீ செஞ்சது நாயமா? அப்பறம் மணியண்ணன், முருகேசு எல்லாம் எதுக்கு இருக்காங்க? உப்ப பாத்தியல்ல... நட்டம் யாருக்கு? அததுக்கு ஆளு இருக்கும்போது..... நாம அதுலயெல்லாம் குறுக்க சால் ஓட்டக் கூடாதல்ல?"

"இருந்தாலும்... பளனி மேல கரம் வெச்சு அந்தாளு பண்றது நல்லாவே இல்லை? அது மட்டும் நாயமா?"

"யார்ராவன்? புரியாத ஆளா இருக்கான். உன்ற சோலி என்னவோ அதையைத்தான் பாக்கோணும்.... ஊட்ல மீனாளுமு சேகருமு என்ன சொல்லப் போற?"

"அதான் புரியல.... ஒரே கொளப்பமா இருக்கு.... கோவங்கோவமா வருது... இவன் சொந்த மில்லு மாதரயல்ல பேசறான்?"

"மறுக்கா மறுக்கா அதயே பேசற? நானே பொடனில ஒண்ணு போடுவேன்... சொன்னாலும் புரியாது.... தனக்காவும் தெரியாது..... செரி... செரி... ஊட்டுக்குப் போ... போய் சூதானமா சொல்லு... நான் போய் சூப்ரைசர் கிட்ட பேசறேன். மொத மணியண்ணனைப் போய் பாக்கோணும்...."

**************

மணியண்ணனும் ஒரு சாதாரண தொழிலாளிதான். ஃபிட்டரு. கொஞ்சம் தன்மையா சூதானமா பேசறதால அல்லாருக்கும் அவுரு மேல ஒரு மதிப்பு. இருக்கறவிகள்ல வயசுலயும் கொஞ்சம் பெரீவரு. எதாச்சும் ப்ரச்னைன்னா மனியண்ணன் கிட்ட ஒரு வார்த்தை கலந்துக்கிடறது வாடிக்கை. பொதுவா அண்ணன் சொல்றது நாயமாவே இருக்கும். மொதலாளிக கிட்டயும் அவர் பேச்சுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவரைத்தான் நான் பாக்கப் போனேன்.

போய் பேசுன பெறகுதான் எனக்கு பல விசியங்க புரிஞ்சுது. பளனியப்பன் தண்ணி போட்டுட்டு ரவுசு பண்றது, வேலை நேரத்துல தூங்கறது, வேலைக்கு வார பொம்பளையாளுக கிட்ட லொள்ளு பண்றது எல்லாம். இப்பிடியாளை ஆபீசர் திட்டுனதோ, ஓவர்டைம் குடுக்க மாட்டேன்னு சொன்னதோ தப்பே இல்லைன்னு அண்ணன் சொன்னதும் திலும்ப வந்துட்டேன்.

காந்திராசு பொதுவா நல்லவந்தேன். என்ன இதுக்கு இவனுக்கு போய் வக்காலத்துக்கு வாங்கறான்னு ஒரே ரோசனை. செரி பெறகு பாத்துக்கிடலாம்னு சந்தைக்கிப் போயி செயா வாங்கி வெச்சுருந்த சாமானையெல்லாம் மூங்கக்கூடைல போட்டு சைக்கள் கேலியர்ல வெச்சுக் கட்டி மெள்ள தள்ளிக்கிட்டே போனேன். வளீல செல்வம் கடைல பச்சியும், போண்டாவும் நவ்வாலு வாங்கிக்கிட்டேன். கெட்டிச் சட்னி கொஞ்சம் கூடவே. பையன் தொரைக்கும், பொண்ணு பூவரசிக்கும் செல்வம் கடை பலகாரம்னா உசுரு.

**************

சுப்பரமணி ஒர்க் சாப்புல காந்தியைப் பாத்தேன். கதிர் அடிக்கிற மெசின் மேல ஒக்காந்து என்னமோ வெல்டிங் அடிச்சுக்கிட்டுருந்தான்.

"ஏங் காந்தி... உப்பத்தேன் மணியண்ணங்கட்டப் பேசீட்டு வாரேன். அந்த பளனி பய ஒண்ணும் சுத்தமில்லை போல இருக்கே. அவனுக்குப் போய் நீ பரிஞ்சு பேசீட்டிருக்க... அவனுக்காக பேசப்போயி உப்ப நீயும் சிக்கீட்டு சீக்கியடிக்கற. தேவையா இது? போகுது உடு. போய் ப்ரொடக்சன் மேனேசர் கிட்டப் போய் பேசு. தேவையில்லாம நடந்து போச்சுன்னு சொல்லு. உன் வேலையை மொத காப்பாத்திக்க. பளனி வெவகாரத்தை அண்ணன் பாத்துக்கிடுவாரு."

"செரி பரமு. நான் போய் மேனேசரைப் பாத்து பேசறேன்"

**************

ரெண்டு நாளாச்சு. காந்திராசு கண்ணுலயே படல. எங்கிட்டு போய் தொலைஞ்சான்னு எனக்கு மண்டைக் கொடைச்சல். மணியண்ணன் என்னியைத் தேடிக்கிட்டிருந்தாருன்னு கேள்விப்பட்டு அவரைப் பாக்கப் போனேன். கைல இருந்த கிரீஸைத் தொடைச்சுக்கிட்டே வந்தாரு மணியண்ணன்.

"ஏப்பா... நீயாச்சும் அந்த காந்திராசுவுக்கு சொல்லியிருக்கக் கூடாதா? இப்பிடிப் பண்ணிப் போட்டானே? ம்ம்ம்ம்?"

பதறிப் போயிட்டேன் அப்பிடியே. "ஏண்ணே.... என்ன ஆச்சு? நானே அவனைப் பாத்து 2 நாளாச்சு. செயாளுக்கு கொஞ்சம் மேலுக்கு நல்லால்லை. ராஸ்கோலு என்ன பண்ணிப் போட்டானுங்?"

"அடப் போப்பா. அவனுக்கு அறிவி கிறிவு இருக்கா இல்லையா? போய் மேனேஜரை அடிச்சுருக்கான். அந்தாளு உப்ப பெரியாஸ்பத்திரில படுத்துக் கெடக்கான். கையை ஒடிச்சு, மண்டையையும் பொளந்துருக்கான். அப்பிடி என்ன அவனுக்கு கோவம்? ஏன்னு கேட்டதுக்கு என்னியுமு அடிக்கிறான். இனிமே நான் எதுவும் பேசப் போறதில்ல. போய் பேசி ஒண்ணும் ஆகவும் போறதில்லை. அவன் சம்சாரத்தை போய் மாரியம்மனுக்கு உப்பு மொளகு கொட்டச்சொல்லு. அவ பாத்து எதுனா செஞ்சா உண்டு. மொத மேனேசர் சரியாகணும்"

எனக்கா... தலையே சுத்துச்சு. படிச்சுப் படிச்சு சொல்லியும் இப்பிடிப் பண்ணிப் போட்டானேன்னு ஆத்தரமா வந்துச்சு. நேரா ஆஸ்பத்திரி போய் மேனேஜரைப் பாத்துட்டு மறுபடி காந்திராசு வீட்டுக்குப் போனேன். அவன் சம்சாரம் விசியம் தெரியாம அவன் எதோ ஊருக்குப் போனதா நெனச்சுக்கிட்டிருந்துச்சு. நான்தேன் விசியத்தை சொல்லிட்டு பயப்படாம இருக்கச் சொல்லிட்டு செயாவை தொணைக்கி விட்டுட்டு போனேன்.

**************

துங்காவி வாய்க்காலுக்கு குளிக்கப் போனபோது யாரோ மரத்துக்கு கீழ உக்காந்துருக்கற மாதர இருந்துச்சு. போய் பாத்தா காந்திராசு.

"என்னப்பா இது... 3 நாளா உன்னிய காணாம.... என்ன இப்பிடி பண்ணீட்ட? மேனேஜர் வேற மூச்சு பேச்சில்லாம கெடக்கான்... எங்க போன? ஏன் இப்பிடி பண்ண?"

காந்திராசு அளுதே போட்டான். "நான் ஒண்ணுமே பண்ணல பரமு. மேனேசர் கட்ட பேசத்தான் அன்னக்கி போனேன். அப்ப அங்க பளனியும் இருந்தான். நான் போனபோதே வார்த்தை தடிச்சு போய் பளனி படுகோவமா இருந்தான். என்ன நடக்குதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ள பளனி மேனேஜரை அடிச்சுப் போட்டுட்டு ஓடீட்டான். நாந்தான் கொண்டு போயி பெரியாஸ்பத்திரில சேத்தீட்டு மணியண்ணனைப் பாக்கப் போனா.... போனா...... போனா.... சொன்னா நீ நம்புவயா? அங்க அண்ணனும் பளனியும் சேந்து ஒக்காந்து தண்ணியடிச்சுட்டு பேசீட்டிருக்காங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. என்னியை பாத்துப் போட்டு அண்ணன் காச்மூச்சுன்னு கத்தறாரு. நாந்தான் மேனேசரை அடிச்சுப் போட்டு ஓட்டீட்டேன்னு பளனி சொல்லியிருக்கான். அண்ணனும் அதை நம்பி என்னியைத் திட்டுனாரு. எனக்கு வந்த கோவத்துல ரெண்டு பேரையுமு நல்லா அடிச்சுப் போட்டு ஒடியாண்ட்டேன்"

"அய்யய்யோ... .என்ராது? பாளாப்போற கோவத்துல என்னாச்சு பாத்தியல்ல? படிச்சு படிச்சு சொன்னனல்ல... சே..... "

"என்ற எடத்துல நீ இருந்தாவல்ல தெரியும்.... அந்த நாயிகளை...."

"நிப்பாட்டுரா.... பண்றதையும் பண்ணிப்போட்டு இங்க வந்து உக்காந்துட்டா.... சரியாப் போச்சா? கெளம்பு... போலாம்...."

"எங்க போலாம்கற?"

"நேராப் போய் மணியண்ணனைப் பாக்கலாம்..... நான் கூட வாரேன்... மேல மேல சிக்கலாக்கிட்டே போறியே..."

**************

மணியண்ணன் ஊட்டுக்கு போற வளீல குருசாமி வந்துக்கிட்டிருந்தான். பாத்ததீமு வேய் வேய்னு கிட்ட ஒடியாந்தான்.

"மொதலாளி தோட்டத்துல இருந்துதான் வாரேன். மேனேசரு, ஒ எம்மு, டைம் ஆபீசரு, யூனியன் லீடரு அல்லாருமே அங்கதேன் இருக்காங்க.... என்னமோ கூடிக் கூடிப் பேசுறாங்க.... ஒண்ணும் புரீல.... எனக்கென்னமோ பக்கு பக்குனு இருக்குது.... "

"மொட்டைத்தாத்தா குட்டைல விளுந்தான்னு... என்னடா சொல்ற? செரி நாங்க மணியண்ணன் ஊட்டுக்குத்தான் போறோம். போய் பாக்கறோம்..... வாடா... நம்ம வேலையைப் பாப்போம்"

மணியண்ணன் வீட்டுக்குப் போனா... குருசாமி சொன்ன ஆளுக பூரா அங்க கூடியிருக்காங்க. என்ன எளவுடா இதுன்னு.... நானும் காந்திராசுவுமு அவிக போன பெறகு பேசலாம்னு கொஞ்சம் ஒதுங்கி நின்னுட்டோம். அவிக பேசுறது கொஞ்ச கொஞ்சம் காதுல விளுந்துது. எனக்கு அப்பதான் லேசா புரிய ஆரம்பிச்சுது. ஓ.ஈ.எம். மிசினுக வரப் போகுது. வெகு நாளாப் மொதலாளிக வட்டத்துல பேசிக்கிட்டு இருந்ததுன்னு அரசப்புரசலா தெரியும். இப்ப முடிவு பண்ணீட்டாங்களாட்ட இருக்கு. பொக்குனு இருந்துச்சு. அந்த பாளாப் போற மிசினு வந்தா எம்புட்டு பேரு வேலை போகுமோ? யூனியன் லீடரையும் வாங்கிப்புட்டாங்களா? மணியண்ணனை உட்டு சொல்ல வெச்சா பெருசா பிரச்னையாகாம இருக்கும்னு அண்ணனையும் பாத்து மசிய வெக்க வந்துருக்காங்க.

கொஞ்ச நேரம் களிச்சு அவிக போன பெறகு அண்ணனும் சந்தோசமா உள்ள போறதைப் பாக்கும்போதே தெரிஞ்சு போச்சு வெலை படிஞ்சு வந்துடுச்சுன்னு. இருந்தாலும் அண்ணன் மேல இருக்கற மரியாதைல போய் பேசுனோம். இன்னும் கொஞ்சம் தெளிவா புரிஞ்சுது. இந்த சஸ்பென்சன் எல்லாம் கொஞ்ச நாளாவே திட்டம் போட்டு செய்யிற நாடகம்னு. அண்ணன் வெளிப்படையா சொல்லாட்டியும் வெளங்கிடுச்சு. எல்லாம் கூட்டுக் களவாணிக. ஆத்தர ஆத்தரமா வந்துச்சு... காந்திராசுவை சொல்லிப்போட்டு நானே எகிறக்கூடாதுன்னு பேசாம வந்துட்டோம். என்ன செய்யிறதுன்னு புரீல... பிரச்னை நமக்கு மட்டுமில்ல... மில்லுல வேலை செய்யிற பாதிப்பேருக்கும் மேல பாதிப்பு இருக்கும். எம்புட்டு குடும்பங்க.... அய்யய்யோ... என்னமோ ஒராள் பிரச்னைன்னு நினைச்சமே..... ஓசிச்சு ஒசிச்சு தலையே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. காந்தி மூஞ்சி பாக்கவே சகிக்கில.

இம்புட்டு மரியாத வெச்சுருந்த அண்ணனும் கடைசீல வெல போயிருச்சே. வேலைக்காரங்களை முன்ன வெச்சு பேசுவார்னு பாத்தா யூனியன் லீடருமல்ல அவிக கூட. இனிமே யார்கிட்ட போய் சொல்லுறது. எப்பிடியும் ஓ.ஈ.எம். வரத்தான் போகுது... அதையை தள்ளித்தான் போட முடியும்... ஆனா இப்பிடி கூட வேலை செய்யிறவனை நம்ப வெச்சு களுத்தறுத்து, வயித்துல அடிக்கிறவக இருக்கற வரைக்கும்?

ஒரு முடிவுக்கு வந்து.... மக்காநாளு... மணியண்ணனும் யூனியன் லீடரும் தெனைக்கும் சாயங்காலம் பஞ்சு குடோனுக்கு பின்னால உக்காந்து பேசுற செட்டுக்கு போனோம். நேரா விசியத்தைப் பட்டுனு ஒடச்சு பேசுனேன். அவிக ரெண்டு பேரையும் நம்பி இருக்கற வேலையாளுகளை ஏமாத்துறது சரியான்னு கேட்டேன். இவுனுகளுக்கு எப்பிடி விசியம் தெரிஞ்சுதுன்னு அவிகளுக்கு கோவம் வந்துச்சே தவுர நாயமா பேசற மாதரயே தெரீல. சே..ன்னு ஆயிருச்சு.

**************

மறுநா காலைல பாதி மிசினுகளுக்கு சப்ளை இல்லைன்னு நிப்பாட்டி வெச்சுட்டாங்க. செனரேட்டர் ரூம்ல ரெண்டு இஞ்சினுக ஓடுலைன்னு பேசிக்கிட்டாங்க. பம்பு ஓட்னாலும் டேங்குக்கு டீசல் வர மாட்டீங்குதாமா. ரெண்டுநா முன்னாலதானே 3 லாரி டீசல் ஏத்தி வேச்சோம்னு பெரிய டேங்குல ஏறிப் பாக்கறதுக்காக சத்திவேலு போயிருக்கானாமா.

நாம்போய் சூப்ரைசர் கிட்ட மேலுக்கு நல்லால்லைன்னு சொல்லீட்டு பாஸ் வாங்கீட்டு வீட்டுக்கு கெளம்புனேன். கொஞ்ச நேரத்துலயே காந்திராசுவுமு வெளிய வந்துட்டான். ரெண்டு பேரும் போய் பெசல் டீ குடிச்சுட்டு ஊட்டுக்கு கெளம்புனோம்.

**************

சாயங்காலம் குருசாமியைப் பாத்தபோது சொன்னான். மணீயண்ணனுமு யூனியன் லீடருமு பெரிய டேங்குல விளுந்து கெடந்தாங்களாம். போலீஸ் வந்து விசாரிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னான். அப்பிடியான்னு கேட்டுக்கிட்டேன்.

************** ************** **************


பி.கு: 80களின் இறுதியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல பெரிய மற்றும் நடுத்தர நூற்பாலைகளில் Open End Spinning Machines எனப்படும் புதிய நூற்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. நூற்பு முறையில் 3-4 நிலைகளை தேவையில்லாத்தாக்கி பல வேலையிழப்புகளை ஏற்படுத்தும் என்று பயந்தனர். உற்பத்தி திறனில் 10% மட்டுமே இந்த புதிய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், சில நூற்பாலைகளில் இவை அதிக அளவில் நிறுவப்பட்டன. தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கிய அந்த காலத்தை ஒட்டிய புனைவு இது.

22 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

அறிவிலி said...

ஸ்லாங் சூப்பரா வந்துருக்கு.
கதையும் நல்லா இருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

கொங்கு வட்டார வழக்கில் சுவையா எழுதுவதில் நீங்கதாண்ணே எப்பவும் டாப்பு. அண்ணன் பழமையாரே இதை ஒத்துக்குவாரு.

அப்படியே “மொளச்சு வரும்போது” அதையும் அப்பப்ப எழுதுங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

அருமை.

புனைவு ஓக்கே.

பேட்டி எங்கே?

Mahesh said...

நன்றி ராஜேஷ்....

நன்றி அப்துல்லாண்ணே... ஆமண்ணே.. .எழுதணும்....

நன்றி ஓம்கார்... அடுத்தது பேட்டி, சொல்லோவியம், சொற்சித்திரம்னு பிக்கப் பண்ணி போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.... இந்த "எக்ஸ்க்ளூசிவ்னெஸ்"க்குதான் என்ன பண்றதுன்னு தெரியல... இப்போதைக்கு ஆட்டோ பயம் இல்லை :)

வடகரை வேலன் said...

நல்லா இருக்குங்க மகேஷ்.

Mahesh said...

நன்றி அண்ணாச்சி...

இராகவன் நைஜிரியா said...

வட்டார மொழி வழக்கும், அதை சொல்லிய பாங்கும் மிக அருமை.

வெண்பூ said...

ம‌ஹேஷ்.. க‌தை ரொம்ப‌ ந‌ல்லா வ‌ந்திருக்கு.. வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு முத‌ல் பாராக்க‌ள்ள‌ புரிஞ்சுக்க‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருந்தாலும் ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ஈஸியா செட் ஆகுது.. ந‌ல்ல‌ முடிவும் கூட‌..

பரிசல்காரன் said...

தேர்ந்த சிறுகதையாசிரியரின் முடிவு. நம்ம ஊரு பாசை நல்லாவேருந்துச்சுங்...

Mahesh said...

நன்றி ராகவன் சார்....

நன்றி வெண்பூ....

நன்றி பரிசல்.... அப்பிடியா??

அது சரி said...

எழுத்து நடையும் வட்டார மொழியும் அபாரம் மகேஷ்... என்னடா ரொம்ப நீளமா இருக்கும் போலருக்கேன்னு யோசிச்சிக்கிட்டே தான் ஆரம்பிச்சேன்..கடைசில, வட்டார மொழிக்காகவே ரெண்டு தடவை படிச்சேன்...

கதை நல்லாருக்கு...நீளமா இருந்தாலும் தொய்வில்லாம டெம்போவும் அப்படியே விறுவிறுன்னு இருக்கு...டைட்டிலும் முடிவும்....வெரி ஆப்ட்...


Nice one!

Cable Sankar said...

நல்ல நடை.. வட்டார வழக்கு அருமை.. நன்றி அப்துல்லா..

Mahesh said...

நன்றி அதுசரி..... ரொம்ப நாளைக்கப்ப்பறம் வறீங்க... நீ மட்டும் அடிக்கடி எழுதறியான்னு கேக்கப்படாது :))))))))

நன்றி கேபிள்ஜி..... நம்ம மார்கெடிங் எக்சிக்யூடிவ் அப்துல்லாவுக்கு 10% போனஸ்...

பழமைபேசி said...

welcome back Anna....Excellent...

Mahesh said...

Thank you Mani anne !!

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன நாயம் இது? ரொம்பப் பெரிசா இருக்குது. இப்ப டைமாயிட்டதால நாளைக்கு வந்து படிச்சு பின்னூட்டறேன். குட் நைட்.

chitravini said...

மகேசு, கத சூப்பருங். நம்ம ஊரு மக்க எல்லாம் படிச்சு போட்டு ஒரே சந்தோசம். அல்லாரும் சொல்லி வெச்சா மாதிரி "டேயி, அண்ணன் நம்ம ஆளு. நம்ம மில்லுல தான் ஸூப்ரேஸரா இருந்தராக்கும். போட்டு தாக்கித்தாரு. நம்ம ஊரு நாயம் நாயந்தேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பீரியட் ஃபிலிம் மாதிரி இது பீரியட் கதையா.. இன்னும் நல்லா செதுக்கியிருக்கலாம். கடைசியில அவங்களை கொலை பண்ணியது யாருன்னு சொல்லவேயில்லையே. ஒருத்தரும் அதப்பத்தி ஒண்ணும் சொல்லலையே.. எனக்குதான் புரியலையா.? ஹும்.!

Mahesh said...

நன்றி சித்ராவினி... .அப்பாடி... தமிழ்ல எழுத கத்துக்கிட்டாரு அண்ணன்...

நன்றி ஆதி..... என்னாதிது? ரெண்டு தரம் படிச்சும் புரியலயா? என்னோட அடுத்த புத்தக வெளியீட்டுக்கு நீங்கதான் முன்னுரை எழுதணும். இப்பவே துண்டு போட்டு வெச்சுட்டேன் :))))))

chitravini said...

சொன்னாதான் நாயமுங்களா? எம்புட்டு கஸ்டப்பட்டு போயிட்டேன் நானு! தமிழ்ல நாலு வார்த்தை எழுதறத்துக்குள்ளார நம்ம தாவு தீந்து போயிருச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடி...ஏதோ 'க்வில் பேட்' கண்டுபிடிச்சனா, தப்பிச்சேன்.

veyilaan said...

கதை நல்லாருந்தது மகேஷ்!

சே.குமார் said...

அன்பின் நண்பரே...



வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

நன்றி.

நட்புடன்,
சே.குமார்.

http://vayalaan.blogspot.com