Saturday, May 22, 2010

க்ரீஸ்..... கிறீச்.... கிறீச்.....


அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தாச்சு. நாம எல்லாம் ஆஹா ஓஹோ அட்டகாசம்னு நினைச்சுக்கிட்டு இருக்கற ஐரொப்பிய யூனியன்ல இருக்கற க்ரீஸ் (Greece) நாட்டோட பொருளாதார இயந்திரம் இப்ப கிரீஸ் இல்லாம கிறீச்... கிறீச்சுன்னு கதறுது. நாரசமா இருக்கு சத்தம். என்னதான் ஆச்சு? சிம்பிளா சொன்னா வரவு எட்டணா செலவு பத்தணா. அதோட விளைவு. இது எல்லா நாட்டுலயும் நடக்கறதுதானே? நம்ம இந்திய பட்ஜெட்லயெல்லாம் சாதாரண துண்டா விழுகுது? ஈரோடு ஸ்பெஷல் ஜமுக்காளமே இல்ல விழுகுது. அங்க மட்டும் என்ன ஆச்சு? (போச்சுடா... எங்கயாவது பொருளாதார சரிவுன்னா இவன் ஆரம்பிச்சுடுவானேன்னு நீங்க முனகறது கேக்குது. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை... எழுதி உங்களை குழப்பியே ஆகணும்)

மொத காரணம் போன வருஷம் க்ரீஸ் நாட்டோட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) யில் 13%க்கு மேல. ரொம்ப ஒண்ணும் அதிகமில்ல ஜென்டில்மென்... ஜஸ்ட் 400 பில்லியன் டாலர்கள் மட்டுந்தான். சரி அதனால? அதனால என்ன.... அதிக வட்டி, அதிக தவணை, இன்னும் அதிக கடன், அதிக அவநம்பிக்கை. க்ரெடிட் ரேட்டிங் குறைவு. அனுமானிச்சதை விட பட்ஜெட் பற்றாக்குறை ரெண்டு பங்கு. அவ்வளவுதான். யாரும் முதலீடு செய்ய தயாரில்லை. ஐரோப்பிய யூனியனுடைய தலையீடு, க்ரிஸ் எடுத்த செலவு கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் முதலீட்டளர்கள் கிட்ட நம்பிக்கையை உண்டாக்கலை. கொஞ்சம் ஊதாரித்தனமான செலவுக் கொள்கைகள். உதாரணத்துக்கு, அரசு ஊழியர்கள் 40 வயசுலயே ஓய்வு பெறலாம். அவ்ஙளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க மனைவி அல்லது மணமாகாத பிள்ளைகள்/பெண்கள் இவங்க அந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கிக்கலாம். இன்னும் மத்த ஐரோப்பிய நாடுகள்ல இல்லாத அதிகப்படியான சலுகைகள். எப்பிடி சமாளிக்க முடியும்?

இப்ப சர்வதேச நிதியும், யூனியனும் சேர்ந்து பணத்தைக் கொட்டி மீட்கறோம்னு சொல்றாங்க. யூனியன்ல 15க்கு மேல நாடுகள் இருக்கு. "நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.

ஐரொப்பிய யூனியன்ல சேரறதுக்கு உண்டான தகுதிகளை காமிச்சு யூனியன் சேர்ந்த எல்லா நாடுகளும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில பல கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அனுசரிக்கணும். ஒவ்வொரு பட்ஜெட்லயும் இவ்வளவு உற்பத்தி, இவ்வளவு செலவு, இவ்வளவு முன்னேற்ற இலக்குன்னு காமிக்கணும். இந்த இலக்கு யூனியனோட மொத்த பட்ஜெட்டோட ஒத்துப் போகணும். இப்பிடியெல்லாம் இருந்தும் ஏன் இந்த மாதிரி சரிவுகள்?

ஐரொப்பிய யூனியனில் 27 நாடுகள் இப்ப இருந்தாலும் 16 நாடுகள்தான் "யூரோ"வுக்கு மாறியவை. இந்த 16 சேர்ந்தது Euro Zone. பொதுவான நிர்வாகம் ஒரு மையத்துல இருந்தாலும் , "யூரோ"வைப் பொறுத்தவரை, அது ஒரு கரன்ஸி அடிப்படையிலான யூனியன் (monetary union). அரசியல் அடிப்படையிலோ அல்லது முழுமையான பொருளாதார யூனியனோ அல்ல. பொருளாதார அடிப்படையில் சில கட்டுப்பெட்டியான நாடுகளும் உண்டு சில ஊதாரி நாடுகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதிர்வடையாத கரன்ஸி யூரோ. உள்நாட்டு உற்பத்தி, செலவு வகைகள், சேமிப்பு வழிகள், பல்முனை வளர்ச்சி என்று எல்லா வகையிலும் வேறுபட்ட நாடுகள்.

இப்படியான ஒரு கூட்டமைப்பில், கரன்ஸி மட்டும் ஒன்றே என்ற நிலையில் போட்டித்தன்மையை (competitive edge) தக்கவைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமே. முன்பு இருந்த நிலையை விட ஏற்றுமதிகள் குறையலாம். உதாரணத்திற்கு, இத்தாலி தானியங்கி வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. இருந்தாலும் யூரோ அடிப்படையில், ஜெர்மனி உற்பத்தி ஆகும் வாகனத்துடன் ஒப்பிடும்போது விலையில் போட்டித்தன்மை குறையும்போது, அந்த விலை வேறுபாடு கூட வாகனத்தை விற்பனையிடத்திற்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்துக் கட்டணத்தில் அடிபட்டுப் போகும் எனும்போது ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. கரன்ஸி ஒன்றாகும்போதிலிருந்தே, வருமான குறைபாடுகளை எதிர்பார்த்து செலவினங்களையும் மாற்றியமைப்பது கட்டாயம் என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அன்னியச் செலாவணி ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வேலை குறைவு, சுலபமான வியாபாரம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகள் இருக்கலாம், எப்படி சமாளிப்பது போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி வைத்தனர். போகப் போக சரியாகும் என்ற அனுமானங்களும் இருந்தன. இப்போது சர்வதேச நிதியமும், யூனியனும் சேர்ந்து க்ரீஸின் கடன்களை வாங்கி 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தைக் கொட்டினாலும் மட்டும் உடனே எல்லாம் சரியாகி விடப் போவதில்லை. க்ரீஸ் தனது செலவினங்களை இறுக்கிப் பிடிக்க வேண்டும். மக்கள் அதிக கட்டுப்பாடுகள், வரிவிதிப்புகள், வங்கி கெடுபிடிகள் எல்லாம் இருக்கும். மக்களோட வாழ்க்கை முறையே மாறலாம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்.

க்ரீஸ்க்கு பின்னால் போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என்று சரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஸ்பெயினும் இத்தாலியும் கூட சமாளித்து விடும். ஆனால் போர்ச்சுகல் சவாலாக இருக்கும்.

இது இப்பிடியேதான் இருக்குமா? நிலையான வழி எதுவும் இல்லையா? க்ரீஸ்க்கு தனியான கரன்ஸி இருந்தா அதை மதிப்பு குறைச்சு போட்டித்தன்மையை கொண்டுவர முடியும். ஆனா யூரோவுல இருந்து வெளியில வர அரசியல் உறுதி வேணும். அது இப்போதைக்கு இன்னும் கடினமா இருக்கலாம் ஆனா நீண்டகால தீர்வு அதுவாத்தான் இருக்க முடியும்.

மக்கள் ஒப்புதலோடதான் யூரோவுக்கு வந்தோம்னு சொல்லலாம். ஆனா பின்னணி அரசியல் விளையாட்டுகள் ரொம்ப. கரன்ஸியை வெச்சுதான் இன்னிக்கு சர்வதேச அளவுல போட்டித்தன்மையை தக்க வெச்சுக்க முடியும். இல்லைன்னா அமெரிக்கா சைனா கிட்டப் போய் யுவான்-டாலர் மதிப்பை சரி பண்ணச் சொல்லி ப்ரஷர் குடுப்பாங்களா?

1999ல அர்ஜென்டினால இதே மாதிரி நிலைமை வந்து 3 வருஷம் ஆச்சு நிமிர்ந்து உட்கார. அப்ப பெசொவைத் தவிர இன்னொரு கரன்ஸியை உருவாக்கி உள்நாட்டு புழக்கத்துக்காக விட்டு, பெசோவை டாலருக்கு எதிரா குறைச்சு ஏற்றுமதியை அதிகரிச்சு, இறக்குமதிகளை தடை பண்ணி, வங்கிகள்ல இருந்த டாலரை எல்லாம் பெசோவா மாத்தின்னு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒருவழியா மேல வந்தது. பார்க்கலாம் க்ரீஸ் என்ன ஆகுதுன்னு. இப்போதைக்கு நம்ம நாட்டு பங்கு மார்க்கெட் ரொம்ப விழாம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.



Sunday, May 9, 2010

கிச்சடி 11.05.2010

"சொறா" படத்தைப் பாக்காமயே நிறையப் பேர் நிறைய எழுதியாச்சு. நான் ஒருத்தந்தான் பாக்கின்னு நினைக்கிறேன். அது ஒரு குறையா இருக்கலாமா? நம்ம நண்பர்கள் வட்டத்துல பேசும்போது கேட்டவை:

"கமல் ஒரே படத்துல் பத்து ரோல்ல நடிச்சாரு ; விசய் பத்து படத்துல ஒரே ரோல்ல நடிக்கிறாரு (!!) "

"நல்ல வேளை.... ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரொயின்க... இல்லாட்டா என்ன படம் பாத்துக்கிட்டுருக்கோம்னே தெரியாது"

"இது ஒருதடவை பாக்கறதுக்கு வேட்டைக்காரன் 100 தடவை பாக்கலாம்"

"அம்பது படம் ஆயிடுச்சா? சீக்கிரம் அரசியலுக்கு இழுத்துக்கிட்டு போங்கப்பா.... அங்கயாவது வேற மாதிரி நடிக்கிறாரான்னு பாக்கலாம்"

*****************************



சிங்கப்பூரின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட "மரினா பே சேண்ஸ்" உல்லாச/சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) திறந்தாச்சு. (அதுலயும் அந்த டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்... க்ளாஸ்... அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!) சூதாடறதுக்கு க்யூவுல நின்னு என்னவோ தலைவர் படம் ரிலீஸ் முதல் ஷோ பாக்கற மாதிரி திடுதிடுன்னு ஓடறாங்க மக்கள். யார் அதிர்ஷ்டம் எப்பிடியோ? திறந்து 3 வாரம் ஆச்சு. தினமும் ஏதாவது பிரச்னைக இருந்துக்கிட்டே இருக்கு போல. "கரண்ட் இல்ல ; ஏசி நின்னு போச்சு ; லிஃப்ட்ல மாட்டிக்கிட்டாங்க ; சிங்கப்பூர் இமேஜ் டேமேஜ்"ன்னு தினம் ஒரு புலம்பல். இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா.




*****************************

நண்பர் ஒருத்தர் சவுதில வேலை பாக்கறார். ஊருக்கு வந்துபோக 3 மாசம் முன்னாலயே லீவு வாங்கி, டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டு, கிளம்பறதுக்கு 2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு. பகீர் !!! பாஸ்போர்ட்டைக் காணோமாம் !! மறுநாளும் அகப்படல. நொந்து போய், கிளம்பற அன்னிக்கு கார்த்தால போய் நானே தேடிப் பாக்கறேன்னு சொல்லி தேடியிருக்காரு. இன்னொரு பகீர் !! டேபிள் ஆடுதுன்னு டேபிள் காலுக்கு முட்டுக் குடுக்கறதுக்காக ரெண்டு பாஸ்போர்ட்டுகளை வெச்சுருக்காங்க. எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கன்னு மனசுக்குள்ள வசவு பாடிட்டு, அடிச்சு புடிச்சு ஊர் வந்து சேந்தாச்சு. ஆனா அவங்க ரொம்ப சாதாரணமா "அதான் கிடைச்சுடுச்சுல்ல... கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"னு விரட்டிட்டாங்களாம். மூளை தலைக்குள்ளதான் இருக்கா இல்லை முட்டில இருக்கான்னு புலம்பித் தள்ளிட்டாரு. ராட்சசன் உசுரு ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி கிட்ட இருக்குங்கற மாதிரி, நம்ம உசுரு அந்த பாஸ்போர்ட். அதுவும் சவுதி மாதிரி நாட்டுல.... ம்ம்.... என்ன சொல்ல?

*****************************

ஓசில டிக்கட் கிடைச்சுதுன்னு "அயர்ன் மேன் 2" குடும்பத்தோட போனோம். காமிக் புக்கை விடவும் காமிக்கலா இருந்தது. படம் அமெரிக்காவுல ஹிட்டாம். என்னங்கடா உங்க ரசனை? டைட்டானிக், பொசைடான், ஐடி4, ஆர்மகெட்டான்ன்னு பிரமாண்ட படங்களை எடுத்த கை காயறதுக்குள்ள இது மாதிரி பேத்தல் படங்களும் எடுக்கறீங்க. அம்புட்டு பெருசா ஒரு வில்லனை டெவலப் பண்ணிட்டு பொசுக்குனு அவன் கதையை முடிச்சுட்டு, கதையை முடிக்க முடியாம.... போங்கப்பா. அடுத்த"அயர்ன் மேன்3" ஓசி டிக்கட் கிடைச்சா ....பாக்கலாம்......பாத்துட்டு இதே மாதிரி......

*****************************