Wednesday, April 28, 2010

ஆழ்கடல்... ஒற்றைப்படகு... உறுதியான மனம்

Solo Circumnavigation - உலகத்தை தன்னந்தனியாக ஒரு படகில் சுற்றி வருவது. இமயத்தின் உச்சியை அடைவது போல ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் இந்தப் பயணத்தை வெகு சிலரே முயற்சி செய்துள்ளனர். 15-ஆம் நூற்றாண்டில் மெகலனின் பயணத்தை ஒப்பிட்டு அதிலிருந்து சில விதிமுறைகளை வகுத்து இந்த "தனி உலகப்பயணம்" மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

விதிகள் ரொம்பவே "சுலப"மானவை:
1. பூமியின் விட்டத்தில் இரண்டு நேரெதிர் இடங்களைக் கடக்க வேண்டும்.
2. பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை இவைகளை இரண்டு முறை கடக்க வேண்டும்.
3. குறைந்தது 40,000 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
4. பனாமா, சூயஸ் போன்ற பெருங்கால்வாய் வழிகளைத் தவிர்க்க வேண்டும். எனவே தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளின் தென்முனைகளை சுற்றியே வர வேண்டும்.
5. பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து சேர வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு கடுமையான சாதனைப் பயணத்தை மேற்கொள்ள உடல்வலிமையை விட அதிகமான மனவலிமை தேவை. நமது இந்தியக் கடற்படையின் கமாண்டர் திலிப் டோண்டே சென்ற ஆகஸ்ட் 15 அன்று இந்த பயணத்தை மும்பையிலிருந்து துவக்கி கிட்டத்தட்ட 75% தூரத்தைக் கடந்து விட்டார். இந்த பயணத்திற்காகவே கோவாவில் உள்ள ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தால் "மாதெய்" என்ற கண்ணாடிநார் பாய்மரப்படகு (fibreglass sail) பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை செய்துள்ளது. ஏறத்தாழ ஒரு வருட காலம் பிடிக்கும் இந்த பயணத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறப்பு குழுவே அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாரஸ்யாமான அவரது பயண அனுபவங்களை அவருடைய இந்த வலைப்பூவில் காணலாம். இந்திய விமானப்படையில் இருக்கும் என் அண்ணன் கமாண்டர் திலிப் டோண்டேவின் நண்பர் என்பது ஒரு பெருமையான செய்தி.



ஆகஸ்ட் 28, 2009



ஏப்ரல் 22, 2010


கொசுறு: இந்த செய்தியை ஒரு நண்பரிடம் மிகவும் சிலாகித்து சொன்னபோது, "அடப் போய்யா, நாட்டுல ஆயிரம் பிரச்னைக.... முக்காவாசி ஜனத்துக்கு கஞ்சிக்கு காசில்ல.... இவுங்க கடல்ல உலகத்தை சுத்தறாங்களாம்.... உருப்படியா எதாவது பண்ணச்சொல்லு" என்றார். ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும், சிக்கல்கள் தீர்ந்த பின்னரே சாதனை என்றிருந்தால் நாம் என்றுமே சாதனை புரிய முடியாது.

10 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

க ரா said...

நல்ல பகிர்வு. நன்றி. நம் நாட்டிற்கு பெருமைதான் இது.

இராகவன் நைஜிரியா said...

நண்பரின் உலகப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இது நிச்சயமாக நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்தாங்க.

// சிக்கல்கள் தீர்ந்த பின்னரே சாதனை என்றிருந்தால் நாம் என்றுமே சாதனை புரிய முடியாது. //

கடலில் அலை எப்ப ஓய்வது, நாம் எப்போ குளிப்பது...

Mahesh said...

நன்றி ராமசாமி கண்ணன்...

நன்றி ராகவன் சார்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சுவாரஸ்யாமான பதிவு..

Mahesh said...

நன்றி பட்டாபட்டி.....

Santhini said...

தனி மனித முயற்சிகள், சாதனைகள் என்று கருதப்படும் முயற்சிகள்
முன்னேறிய , முன்னேறும் தேசங்கள் அனைத்துக்கும் தேவையாய் இருக்கின்றன.
தனி மனித சாதனைகள், பின்வரும் சந்ததியின் முயற்சிகளுக்கு உரம்போடும் செயல்கள்.
கஞ்சியில்லாத மனிதனுக்கு தேவையானது, அத்தகைய உரம்.
தனிமனித முயற்சிகள் தன்னால் ஆன விதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கிறது.

Thamira said...

ரெண்டு பேருன்னா பேசிக்கிட்டே ஜாலியாப்போகலாம். ஒருத்தர்னா கொஞ்சம் கஷ்டம்தான் போலிருக்கு.. ஹிஹி.!

Mahesh said...

நன்றி நானும் என் கடவுளும்....

நன்றி ஆதி.... நான் கூட அவர்கிட்ட கேட்டேன்.. "ஆதியோட கதைகள், என்னோட கவிதைகள் எல்லாம் படிச்சுக்கிட்டே போங்க... நல்லா பொழுது போகும்;அறிவு வளரும்"னு. அவர் சொன்னாரு.. "அதையெல்லாம் படிச்சதுனாலதான் இந்த சங்கடத்துக்கு உலகத்தையே சுத்தி வந்துடறேன்னு கிளம்பிட்டேன்."

அறிவிலி said...

உங்க அண்ணனுக்கு ஒரு ஃப்ரெண்டு, கஷ்டப்பட்டு தண்ணியில போய் உலகத்தை சுத்தறாரு.

ஆனா,உங்களுக்கு ஒரு ஃப்ரெண்டு, தண்ணி உள்ள போனா உலகமே அவுர சுத்தி வரும்.

பழமைபேசி said...

//ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும்//

நியாயமான ஆதங்கம்...