Thursday, January 15, 2009

மொளச்சு வரும்போது... 5


பழைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4

தொடர்ல கொஞ்சம் கேப்பு விழுந்து போச்சு. நடுவுல உலகத்துல என்னென்னமோ நடந்து நாம அதப் பத்தியெல்லாம் எழுதிக்கிட்டுருந்தமா? அதான்... அப்துல்லா அண்ணன் வேற சிங்கைல சந்திச்சபோது ஏன் எழுதலன்னு கேட்டாரா... பார்ரா... இன்னுமா இவுங்க நம்பளை நம்புறாங்கன்னு ஒரே ஃபீலிங்ஸ். சரின்னு ஆரம்பிச்சாச்சு.

ஸ்கூல்ல சாரணர், ரோவர்ஸ், என் ஸி ஸி எல்லாம் இருந்துது. எதுலயாச்சும் சேரணும்னு நானும் நண்பன் செந்திலும் (இப்ப உடுமலைல லீடிங் பல் மருத்துவர்) யோசிச்சோம். என் ஸி ஸின்னா காலை ட்ரில் முடிஞ்சதும் சரஸ்வதி கஃபேல இருந்து இட்லியோ, பொங்கலோ, உப்புமாவோ கிடைக்கும். ஆனா அதுக்கு காலங்காத்தால 6 மணிக்கு எழுந்து 6:30 க்கு ஸ்கூல் க்ரவுண்ட்ல இருக்கணும். இது சரிப்படாது. ரோவர்ஸ்னா +1 +2 பசங்களுக்கு மட்டுந்தான்னு சொல்லிட்டாங்க. சரி பாக்கி சாரணர் தான். அதுலயே சேருவோம்னு சேந்துட்டோம். நிறைய டூர் கூட்டிக்கிட்டுப் போவாங்க. போன முதல்நாளே சாரணர் இயக்கப் பாட்டு சொல்லிக் குடுத்தாங்க. "ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா..." நானும் செந்திலும் "என்னது, சண்டை ஓஞ்சா ரசமும் மோருமா?"ன்னு பேசிக்கிட்டது சார் காதுல விழுந்துடுச்சு. அவர் கைல வெச்சுருந்த குச்சி ரெண்டு பேரு இடுப்புலயும் விழுந்துடுச்சு. என்ன.... ரெண்டு நாளைக்கு ஒக்காரும்போது கொஞ்சம் அசௌகரியமா இருந்துது.

பொரட்டாசி மாசமாச்சுன்னா, சனிக்கிழமைகள்ல நேதாஜி க்ரவுண்டுல வெளயாட முடியாது. டெம்பரரியா பஸ் ஸ்டாண்டு க்ரவுண்டுக்கு மாறிடும். சந்தைப்பேட்டை சைடுல இருந்து பூரா கட்டை கட்டி "ஏழுமலையான் கோயில் ஸ்பெஷல்"னு போட்டு பஸ் பூரா இங்க நிப்பாட்டிருவாங்க. காலைல 4 மணிலேந்து 10 நிமுசத்துக்கு ஒரு பஸ் போகும். அமராவதி நகர் போற வழில சட்டுனு வலது பக்கமா திரும்பி மலை அடிவாரத்துல எறக்கி விட்டுடுவாங்க. மேல கோயிலுக்கு நடந்து போக ஒருமணி நேரம் ஆயிரும். நாங்க சாரணர்கள்தான் "டெம்பில் சர்வீஸ் வாலண்டியர்"க. காலைல மொத பஸ்ல போய் மேல ஏறி எங்களுக்கு ஒரு டெண்ட் அடிச்சு, சாமான்லாம் வெச்சுட்டு கட்டைக கட்டி க்யூ வரிசைய கண்ட்ரோல் பண்ணணும். ரெண்டு பேர் டெண்ட் அடிக்க, ரெண்டு பேரு தண்ணி கிண்ணி (அது என்ன கிண்ணின்னு கேக்கப்படாது... அதெல்லாம் ஒரு ரைமிங்கா வரும்) புடிச்சு வெக்க, குப்பைத் தொட்டி வெக்கன்னு போயிருவானுக. மீதியெல்லாம் க்யூ சரி பண்ண.

மலைக்கோயில் சின்னக் கோயில்தான். பொரட்டாசி மாசம் மட்டும் 4 அல்லது 5 சனிக்கிழமை மட்டும் தொறப்பாங்க. திருப்பதிக்கு போக முடியாதவிங்க இங்க வந்து கும்புட்டா திருப்பதிசாமிய கும்புட்ட மாதிரின்னு சொல்லுவாங்க. எப்பிடியும் ஒரு 10000 பேராச்சும் சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருந்து வருவாங்க. வரவங்க எல்லாம் தேங்கா, அவுல், வெல்லம் கொண்டு வந்து, அங்கங்க உக்காந்து தேங்கா ஒடச்சு, துருவி, வெல்லம் அவுல் சேத்துப் பெணஞ்சு சாமிக்கு படையல் ரெடி பண்ணுவாங்க. அப்பறம் க்யூவுல நின்னு கோயிலுக்குள்ள போய் படையல் வெச்சுட்டு வெளிய வந்து மத்தவங்களுக்கும் குடுத்து அவிகளும் கொஞ்சம் சாப்புடுவாக.

இப்பத்தான் எங்களுக்குள்ள சண்டை ஆரம்பிக்கும். யாரு தேங்கா ஒடைக்கிற எடத்துல நிக்கிறது, யாரு கோயில் வாசல்ல நிக்கிறதுன்னு. தேங்கா ஒடைக்கிற எடத்துல நின்னா எளநி குடிக்கலாம். கோயில் வாசல்ல நின்னா பூசை முடிஞ்சு வெளிய வரவங்க மொதல்ல நமக்குத்தான் பிரசாதம் குடுப்பாங்க. மத்தபடி க்யூ கண்ட்ரோல் பண்ண கீழ கிட்டத்தட்ட 1/2 கி.மீ. தூரத்துக்கு அங்கங்க நாங்க நிக்கணும். அதுலயெல்லாம் ஒண்ணுங் கெடைக்காது. மேல நிக்கறவன் எவனையாவது வாங்கி சேத்து வெக்கச் சொல்லி அப்பப்ப மேல வந்து சாப்டுக்கணும். கால் வலி கண்டுரும். அதுனால டெம்பில் ட்யூட்டின்னு ஷெட்யூல் வந்ததுமே எங்களுக்குள்ள ஒரு ஷெட்யூல் போட்டுக்குவோம். (சாரணர் இயக்கத்தோட மோட்டோவே Be Prepared ! ) 4 சனிக்கிழமையும் நாங்களே பிரிச்சுக்கிட்டு எளநி, அவுலுன்னு வளச்சுக் கட்டிருவோம். இதுல வேற திடீர்னு அழுகத் தேங்கா எளநி வாயை கெடுத்து நாறடிச்சுடும். இல்லேன்னா யாராவது ஒரே புளிப்பு வெல்லமா கொண்டாந்து படையல்ல கலந்துருப்பாங்க. அது சாப்ட்டா மூஞ்சி ஒரு கோணல் கோணும். ரெண்டு வாழைப்பழம் சாப்டாத்தான் வாய் சரியாகும். எல்லாத்துக்கும் மேல கொரங்குக அட்டகாசம் பண்ணிக்கிட்டுருக்கும். அதுக கிட்டதான் கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கணும். எது கெடச்சாலும் அதுகளுக்கு மொதல்ல கந்தாயங் கட்டீட்டுதான் சாப்புடுவோம். டெம்பில் சர்வீஸ் போனா ஒரு ஆதாயம், திங்கள் கிழமை ஸ்கூலுக்கு போக வேண்டாம். பின்ன? சனிக்கிழமைய 'திங்கற' கிழமையா ஆக்குனா ஞாயிறும் திங்களும் அடைப்பெடுக்க வேண்டாம்?

இது ஆச்சா? இந்த லயன்ஸ் க்ளப்பு, ரோட்டரி க்ளப்புக்காரங்க அடிக்கடி எதாவது மருத்துவ முகாம்க உடுமலைய சுத்தி இருக்கற கிராமங்கள்ல நடத்துவாங்க. அதுக்கும் நாங்கதான் சர்வீஸ் வாலண்டியர்ஸ். முகாம் நடக்கற ஸ்கூல், மில், கல்யாண மண்டபம் இதெல்லாம் ரெடி பண்றது, நோயாளிக ரெஜிஸ்ட்ரேஷன், குறிப்பிட்ட டாக்டர்ட அனுப்பறது, டாக்டர் பக்கத்துல நின்னு அவர் சொல்றத கார்டுல எழுதறது, மருந்து குடுக்க கூட்டிக்கிட்டு போறதுன்னு இதெல்லாம் செய்யணும். மூணு வேளையும் மூக்குப் புடிக்க சாப்படலாம். டாக்டருகளும் எதாவது சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் குடுப்பாங்க. சைடுல மருந்து பாட்டில்களோட சின்ன ரப்பர் மூடிக கலர் கலரா கிடைக்கும். சிகரட் பாக்கெட்டுக்கு அந்த மூடிகள சக்கரமா ஃபிட் பண்ணி ஓட்டலாம்.

ஒருதடவை பெதப்பம்பட்டி கொங்குரார் மில்லுல கண் பரிசோதனை முகாம். நானும் செந்திலும் மருந்துப் பொட்டிகளுக்கு காவல். எதோ டெஸ்ட் பண்றதுக்காக டாக்டருக சின்ன லிட்மஸ் பேப்பர் பட்டைக வெச்சுருந்தாங்க. அது லிட்மஸ்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. எதேச்சையா அதுல தண்ணி படப்போக சிலது நீலமா, சிலது கரும்பச்சையான்னு கலர் மாறுச்சு. அவ்வளவுதான்... நானும் அவனும் அங்க இருந்த எல்லா பேப்பர்களையும் தண்ணித் தொட்டி கிட்டப் போய் நின்னு நனைச்சு நனைச்சு போட்டுட்டோம். திடீர்னு டாக்டர் வந்து லிட்மஸ் கொண்டாங்கன்னாரு. நமக்கு பப்ளிமாஸ்தான் தெரியும். அப்பறம் அவரே தேடிப் பாத்துட்டு "40 அட்டை கொண்டு வந்தேனே, எங்க போச்சு"ன்னு சொல்லிக்கிட்டே போயிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் பாத்துக்கிட்டு நின்னோம். கொஞ்ச நேரத்துக்கு பிறகு பின்னால இருந்து "வாங்கடா இங்க"ன்னு சார் சத்தம் போட்டாரு. எதுக்கு அப்பிடி 'அன்பா' கூப்படறாருன்னு ஓரளவுக்கு புரிஞ்சு போச்சு. அப்பிடியே பூனை மாதிரி போய் நின்னா, அவர் பக்கத்துல நாங்க நனைச்சுப் போட்ட லிட்மஸ் காய்தம் பூரா கெடக்கு. அப்பறம்? அப்பறம் தாராபுரம் இப்பறம் கல்லாபுரம். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்.

ஒருமுறை இது மாதிரி முகாமுக்கு கெளம்பும்போது தமிழ் வாத்தியார் ஒரு கேள்வி கேட்டார். நீங்க முன்னாடியே கேள்விப் பட்டிருக்கலாம்.
"ஆனையை பூனை தின்னுச்சாம்... பூனையை தேனீ தின்னுச்சாம்" இதுக்கு என்ன அர்த்தம்? பதில்...... நாளைக்கு....

15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வெண்பூ said...

ரொம்ப இயல்பா நகைச்சுவை கலந்து இருக்கு மஹேஷ். முக்கியமா

//
ரெண்டு நாளைக்கு ஒக்காரும்போது கொஞ்சம் அசௌகரியமா இருந்துது.
.
.
சனிக்கிழமைய 'திங்கற' கிழமையா ஆக்குனா ஞாயிறும் திங்களும் அடைப்பெடுக்க வேண்டாம்?
.
.
சைடுல மருந்து பாட்டில்களோட சின்ன ரப்பர் மூடிக கலர் கலரா கிடைக்கும். சிகரட் பாக்கெட்டுக்கு அந்த மூடிகள சக்கரமா ஃபிட் பண்ணி ஓட்டலாம்.
//
இதெல்லாம் ரொம்ப ரசிச்சேன்..

Mahesh said...

நன்றி வெண்பூ.... யூ தெ பஷ்ட்...

சின்னப் பையன் said...

நல்ல கொசுவத்தி.... :-))

இதே மாதிரி நானும் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் (வைகுண்ட ஏகாதசி) சர்வீஸ் செய்திருக்கிறோம்.

வாரமொருறை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து காவலர் ரோலும் செய்திருக்கிறோம்.

அவங்க புண்ணியத்திலே தில்லி வரைக்கும் போனேன்.....

ஆயில்யன் said...

//அது என்ன கிண்ணின்னு கேக்கப்படாது... அதெல்லாம் ஒரு ரைமிங்கா வரும்)///


வரட்டும் !

வரட்டும்!

ஒரு ரைமிங்க் மட்டும்மில்ல பல ரைமிங்க்ல வந்தாலும் நோ கொஸ்டீன்ஸ் :)))))

ஆயில்யன் said...

//ஷெட்யூல் வந்ததுமே எங்களுக்குள்ள ஒரு ஷெட்யூல் போட்டுக்குவோம். (சாரணர் இயக்கத்தோட மோட்டோவே Be Prepared ! ) 4 சனிக்கிழமையும் நாங்களே பிரிச்சுக்கிட்டு எளநி, அவுலுன்னு வளச்சுக் கட்டிருவோம். //


அடேங்கப்பா எதோ இந்த நேரத்துல சொல்லும்ன்னுனாச்சும் தோணுச்சே! :))))

ஆயில்யன் said...

// "ஆனையை பூனை தின்னுச்சாம்... பூனையை தேனீ தின்னுச்சாம்" இதுக்கு என்ன அர்த்தம்? பதில்...... நாளைக்கு....//


ஒ.கேய்ய்ய் வீ வில் மீட் டூமாரோ பை பை :)))))

Anonymous said...

மூன்று பின்னோட்டங்கள்: முதலில் விருது: பட்டாம்பூச்சி பூக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை...அதிலுள்ள தேனைப்பற்றித்தான் கவலைப்படும். அதுபோல் விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல், அதிலுள்ள கருத்துக்களை மட்டும் பரிமாரிக்கொள்ளும் 'துக்ளக்' மகேஷுக்கு வாழ்த்துக்கள். இரண்டாவதாக சாதி: சாதி ஒழியப்பட வேண்டிய ஒன்று...இதில் சந்தேகமே இல்லை. அதுவும் இன்றைய நூற்றாண்டில் மானசீகமாக இல்லாவிடினும்...வெளிப்படையாக ஒத்துக்கொண்ட ஒரு விஷயம். ஆனால், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இதை நடைமுறைப் படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது நிதர்சனமான, உயர் மட்ட, படித்தவர்களின் தினசரி வாழ்க்கை முறை. கண்கூடாக கண்டு வருகிறேன். ஏனெனில் இதை நடைமுறை படுத்தாதவர்கள் தங்களுடைய முறைக்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். Honesty is Lack of Opportunity. இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இன்று வரை நடுத்தர வர்க்க மக்களுக்கு வராமல் இருந்து, இப்போது தொடங்கி இருக்கிறது. இந்த உணர்வு, மாற்றமாக மாற நாளாகும். ஏனெனில், மாற்றம் மேலிருந்து கீழ் நோக்கி வர வேண்டும். என்ன வருத்தம் என்றால், நம்மில் சிலர், இந்த மாற்றத்தையும், அதற்கான வாதத்தையும் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். Like anonymous....he is trying to hide behind a news paper article, justifying his thought process. No need. ஒன்றே குலம்...ஒருவனே தேவன்..., சாதிகள் இல்லையடி பாப்பா....இதெல்லாம் வெறும் எழுத்துக்கள் அல்ல. உணர்வு பூர்வமான அமரத்துவம் பெற்ற சொற்கள். அவற்றை உண்மையாக்கும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆதலால், நமக்கு தெரிந்த வரையில், முறையில், தினசரி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம். மாற்றம் வரும். மூன்றாவதாக (முடிவாக)...மொளச்சு வரும்போதில், மகேஷ், ஏழுமலையான் கோயில் 'கலாக்காயை' மறந்து விட்டார். அந்த புளிப்பான, பழுத்தும், பழுக்காத கலாக்காயை சாப்பிட்டு விட்டு நம் மக்களின் மூஞ்சி போகும் போக்கைப் பார்த்து அங்குள்ள குரங்குகளே பயந்து ஓடி விடும்.

Mahesh said...

வாங்க ஆயில்யன்.... நன்றி

ச்சின்னப்பையன் : அட நீங்களும் ஸ்கௌட்டா? குடுத்து வெச்சவங்க... டெல்லி வரைக்கும் போனீங்க... நாங்கல்லாம் கோயமுத்தூர் தாண்டல :(

நன்றி chitravini : அண்ணன் அப்பப்ப சைக்கில் கேப்புல வலைல விழுந்து எந்திரிச்சு போவாரு. என்ன பண்றது? இருக்கற எடம் அப்பிடிப்பட்ட புண்ணியஸ்தலம் :(

பழமைபேசி said...

இப்ப போய்ட்டு, மறுபடியும் வர்றேன்!

நசரேயன் said...

நல்ல கொசுவத்தி சுத்துறீங்க, ரெம்ப நகைசுவையா அருமையா இருக்கு, பழைய பாகத்தையும் படிக்கிறேன்

பழமைபேசி said...

நம்மூர் வாசம்... அடடா.... பொரட்டாசி சனிக்கிழமைக்கு ஏழுமலையாங் கோயிலுக்குன்னா, காசு கிடைக்கும். அத வாங்கிட்டு, லதாங்கி என்ன? கல்பனா என்ன? திடீல்ன்னு, ஒரு சனிக்கிழமை உடுமலைப் பேட்டைக் கொட்டாயெல்லாம் சலிப்படெத்து, பொள்ளாச்சி துரைசுக்கு மஞ்சில் விரிஞ்ச பூக்களுக்குப் போனோம். தாய்மாமங்காரன் எங்களுக்கு முன்னாடியே அங்க. வேறென்ன, எங்கம்மா கிட்ட போட்டு விட்டுட்டாரு மனுசன்.... ச்சே!

Mahesh said...

வாங்க நசரேயன்... நன்றி... படிங்க.. படிங்க... படிச்சுட்டு சொல்லுங்க.

நன்றி மணியாரே.... போட்டுக்குடுத்த மாமனை என்ன பண்ணீங்க?

எம்.எம்.அப்துல்லா said...

ஆகா ஊருசுத்திக்கிட்டு த்ருஞ்சதுல இதப் பார்க்காம போய்ட்டேனே ;(

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா அண்ணன் வேற சிங்கைல சந்திச்சபோது ஏன் எழுதலன்னு கேட்டாரா//

நம்ப பேச்சையும் கேக்குறீகன்னு நினைக்கையில எனக்கு அழுகை,அழுகையா வருது !

எம்.எம்.அப்துல்லா said...

நானும் ஸ்கவுட்டுல டேராடூன் போனேன். அதான் என்னோட முதல் டூர். அன்னைக்கு ஆரமிச்ச ஒட்டம் இன்னும் தொடருது.