Thursday, November 13, 2008

முத்தமிழ் - எந்தத் திக்கில்?

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
- கவி கம்பன்

எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கும்போது திடீர்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது. (இது பாட்டா, செய்யுளா?) இது ஞாபகம் வந்ததும் கூடவே புலவர் கீரனோட ஞாபகமும் வந்தது.

உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.

அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.



எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.

இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.

செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.

மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....

9 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

நானே இன்னைக்கு நொந்து போயிருக்கேன்... நீங்க வேற, வெந்த புண்ல மொளகாப் பொடியத் தூவுறீங்ளே?!

நனவோடை நல்லா இருக்கு...

Mahesh said...

மொளகா போடறதெல்லாம் இல்லீங்க... நான் ஒண்ணும் தமிழ் வெறியன் எல்லாம் கிடையாது. எல்லா மதமும் சம்மதம்கற மாதிரி எல்லா மொழிகளையும் தாய்மொழிதான். அதுக்காக ஒரு மொழியை, அதுவும் நாம பிறந்து, நினைவு தெரிஞ்சு பேச ஆரம்பிச்ச முதல் மொழியை கேவலப்படுத்தாம இருக்கலாம். பல மொழிகளை தெரிஞ்சுக்கறதால இருக்கற நன்மைகளை அனுபவ பூர்வமா உணர்ந்தவன்ங்கற முறைல சொல்றேன்.

ஆயில்யன் said...

தமிழ் - கல்லூரிகளில் மாணவர்களின் கவனம்பெற்று இலக்கியம் சமயங்களில் ஆழ்ந்து எழுந்தவர்கள் பின்னாளில் பெரிய பெரிய சொற்பொழிவாளர்களாக உருவாகினர் - 20 வருடங்களுக்கு முன்பு!

இன்றைய நிலையில் அது போன்றதொரு வாய்ப்புக்களோ அல்லது சூழ்நிலைகளோ மாணவர்களுக்கு சுத்தமாக இல்லை இலக்கியங்கள் படிக்கவும் குறைந்த பட்சம் பார்க்கவும் கூட நூலகங்களை நாடுவது அறவே மருகிப்போய்விட்டது!

தமிழை - பெயரில் மட்டும் வைத்திருக்கிறது நம் அரசு!

Mahesh said...

கருத்துக்கு நன்றி ஆயில்யன்... கல்லூரிகளில் தமிழின் மீது கவனமா? சட்டக் கல்லூரி மாணவர்களோட கவனம் எது மேல இருந்துது பாத்தீங்கள்ல? விஜய் டிவில வர "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" ஒரு நம்பிக்கைக் கீற்று.

சின்னப் பையன் said...

ம். ப்ளாஷ்பேக் சூப்பர்.. திரு.ஆர்.எஸ்.மனோகர் நாடகங்களெல்லாமே சூப்பர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் எல்லாத்தையுமே பார்த்திருக்கேன்....

பள்ளியிலும் ஆண்டுக்கொருமுறை நீங்க சொன்னா மாதிரி தமிழ் இலக்கிய மன்றம் சார்புலே நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி எல்லாத்தையும் நடத்துவார்கள். எங்க தமிழ் வாத்தியாரும் எல்லாரையும் அதிலே கலந்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி, மேற்கொண்டு பங்கேற்க குறிப்புகள் கொடுத்து உதவியும் செய்வார்.

நல்ல பதிவு.

Anonymous said...

நான் தமிழ்நாட்டிலிருந்து வெளியே வந்து 20 வருடம் ஆகிறது. நான் பார்த்த வரை 'முத்தமிழ்', வெறும் 'தமிழ்' ஆகி, தற்போது 'தமில்' ஆக உள்ளது. எழுத்துப் பிழை இல்லாமல் இன்று எந்த கல்லூரி மாணவனாலாவது எழுத முடியுமா? எல்லாம் 'தமிங்கிலீஷ்' பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் யார் காரணம்? நம் தலைமுறைதான்!! நாமெல்லாம் நல்ல வாத்தியாரிடம் தமிழ் கற்று, நல்ல அறிஞர்களிடமிருந்து தமிழ் உணர்ந்தோம், நிறைய தமிழ் படித்தோம்...நல்ல புத்தகங்களிலிருந்தன...கொடுத்துதவ நூலகங்கள் இருந்தன. நாம்தான் 'பொருளீட்டும்' (தேவைக்கு அதிகமாக) முயற்சியில் நாட்டையும், மொழியையும் விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். அங்கு நாட்டில் இளைய தலைமுறைக்கு யார், எப்படி தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று க‌வனிக்க யார் உள்ளார்கள்? யாரும் இல்லை. இவற்றோடு, பணம், பணம் என்று பறக்கும் சமுதாயமும், அரசின் மெத்தனப் போக்கும் சேர்ந்து தமிழ் கற்க்கும் ஆர்வத்தை பின்னுக்குத் தள்ளி விட்டன. நாமெல்லாம் எந்த எந்த வனத்திலோ மேய்ந்துவிட்டு, நம் இனத்துக்கு திரும்பும் போது (பழமைபேசி மன்னிக்கவும்) ஒரு வேளை நாமெல்லாம் நம் இனத்திலேயே அந்நியராகி விடுவோமோ?? இன்னும் என்னென்னவோ கேள்விகள் எழுகின்றன. தமிழ் நாட்டில் தமிழ் கற்றவனை தரம் குறைத்துப் பார்க்கும் நிலை என்று குறையும்? வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகளை முறைத்துப் பார்க்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை எப்போது குறையும்? எப்போது தமிழ் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார், கணக்கு வாத்தியாருக்கு சமமாக நடத்தப்படுவார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!!

Mahesh said...

வாங்க ச்சின்னப்பையன்.... நீங்களும் மனோகர் விசிறியா ?!

பழமைபேசி said...

//நம் இனத்துக்கு திரும்பும் போது (பழமைபேசி மன்னிக்கவும்) ஒரு வேளை நாமெல்லாம் நம் இனத்திலேயே அந்நியராகி விடுவோமோ??//

அண்ணா, சரியாச் சொன்னீங்க. எனக்கு இப்பவே அப்படித்தான் தோணுது!

பழமைபேசி said...

////நம் இனத்துக்கு திரும்பும் போது (பழமைபேசி மன்னிக்கவும்) ஒரு வேளை நாமெல்லாம் நம் இனத்திலேயே அந்நியராகி விடுவோமோ??//

அண்ணா, சரியாச் சொன்னீங்க. எனக்கு இப்பவே அப்படித்தான் தோணுது! அதான் கண், மொளகா எல்லாம்!!