Wednesday, September 3, 2008

மொளச்சு வரும்போது...3

பழய பதிவுக இங்க ...1 ...2

பெரிய கவுண்டர் வீட்டுல கெணறு இருக்குன்னு சொன்னொமில்ல... அது கூட கவுண்டர் மனசு மாதிரியே ரொம்ப பெருசு. ரொம்ப ஆழம் கூட. ஒரு 50 அடி ஆழம் இருக்கும். வெய்ய காலத்துல 30 அடி கீழ தண்ணி இருக்கும். மழக்காலத்துலயும், பக்கத்துல இருக்கற ஒட்டுக்கொளத்துக்கு தண்ணி வரத்து (திருமூர்த்தி மலையிலேருந்து உடுமலை வாய்க்கால் வழியா) அதிகமா இருக்கும்போதும், ஒரு ரெண்டு மூணு அடி கீழயே தண்ணிய பாக்கலாம். இப்பிடி தண்ணி மட்டம் மேல கீழ இருக்கும்கறதால மோட்டார் பம்புக்காக கெணத்துக்குள்ள மூணு நாலு இடத்துல கான்க்ரீட் 'பெட்' போட்டுருக்கும். அப்பப்ப பம்ப்பை மாத்தி மாத்தி வெச்சுக்குவாங்க. உள் செவுரு சைடால படிக மாதிரி வெட்டி வெச்சுருக்கும். அப்பிடி அங்கங்க வளந்துருக்கற செடிகள புடிச்சுக்கிட்டே மெள்ள எறங்கணும்.

இந்த எடத்துல எங்க அப்பாவைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அவுரு மிலிட்டரியில இருந்தபோதே பெரிய நீச்சல் வீரர். பின்னால சென்னை ஐ.ஐ.டி.ல நீச்சல் ப்யிற்சியாளராவும் இருந்தாரு. அதோட மாநில அளவுல 4 முறை டைவிங் சாம்பியன் வேற. அதுனால ஊர்ல பல பேர் அவரை இந்த கெணத்துக்கு கூட்டிட்டு வந்து நீச்சல் கத்து தர சொல்லுவாங்க. அப்போ என்னை, அண்ணனை, அண்ணனோட ஃப்ரெண்டுகளயெல்லாமும் கூட்டிக்கிட்டு போவாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட் வாத்தியாரு. நமக்கா தண்ணிய பாத்தாலே ஒடம்பு மரக்கட்ட மாதிரி வெறச்சுக்கும். அப்பறம் எங்க நீச்சல்? அப்பாவோட கூச்சல்தான் அதிகமா இருக்கும். அண்ணனும், ஃப்ரெண்டுகளும் திட்டு வாங்க பயந்துக்கிட்டே ஒழுங்கா கத்துக்கிட்டாங்க. நாம சிங்கம்ல? இதுக்கெல்லாம் பயந்துருவோமா? நல்லா 'கடப்பாரை' நீச்சல் கத்துகிட்டம்ல. கெணத்துல இருந்து எறைக்கிற தண்ணி மொதல்ல ஒரு பெரிய தொட்டில விழுந்து அப்பறமா வாய்க்காலுக்கு போகும். நான் அந்த தொட்டியில போய் இடுப்பளவு தண்ணியில நல்லா ஊறுவேன். 'பொன்னொன்று கண்டேன் ; பெண்ணங்கு இல்லை" பாட்டுல சிவாஜியும், பாலாஜியும் நீச்சல் கொளத்துல ஊறுரதை பாத்திருக்கீங்களா? அதே மாதிரி. ஆன என்னவோ மணிக்கணக்கா நீந்தி களைச்சு போனவனாட்டம் கவுண்டர் வீட்டுல திங்கற தீனிக்கு கொறச்சல் இருக்காது. ஆனா நான் கடசி வரைக்கும் எங்க அப்பா கிட்ட கத்துக்கவே இல்ல. பின்னால என் ஃப்ரெண்டுக கத்து குடுத்தாங்க.

கத்தாழ பெருசா வள்ந்த்ததும் நடுவால இருந்து பெரிய ஒரு தண்டு வளந்து பூ பூக்கும். அந்த தண்ட எடுத்து ரெவ்வெண்டு அடியா வெட்டி வெயில்ல காயப் போடுருவாங்க. நல்லா காஞ்சு அது தக்கை மாதிரி எடையே இல்லாம லேசா ஆயிரும். இத கத்தாழ முட்டின்னு சொல்லுவாங்க. மூக்கணாங் கயிறுக்கான பஞ்சுக் கயிற இந்த முட்டியோட ஒரு பக்கத்துல கட்டிட்டு இன்னொரு முனைய அப்பிடியே விட்டுருவாங்க. நீச்சல் கத்துக்கிறவங்க இந்த முட்டிய முதுகுப் பக்கமா, இடுப்பு கிட்ட வெச்சு வயிரோட சேத்து கட்டிகிடணும். அப்பறம் 100 அடி ஒசரத்துல இருந்து குதிச்சாலும் மெதந்துக்கிட்டே இருக்கலாம். மூழ்கவே மாட்டீங்க. அப்பிடியே கைய கால அடிச்சு கத்துக்க வெண்டியதுதான். ரெண்டு நாளைக்கு அப்பறம், வெறும் கயித்த இடுப்புல கட்டீட்டு இன்னொரு முனைய யாராவது ஒருத்தன் கரையில இருந்து புடிச்சுக்குவான். நாம அப்பிடி நீந்தி வரணும். எதாவதுன்னு அவன் கயித்தப் புடிச்சு இழுத்து கரை சேத்துருவான். இப்பிடி ஒரு ரெண்டு நாள். அவ்வளவுதான். மறு நாள் தனியாவே நீச்சல் அடிக்கணும். இல்லனா பசங்க பேசுர பேச்சுக்கு, பூக்கட்ற நூல்லயே தொங்கி உசுர விட்டுரலாம்.

இப்பிடி கத்துக்கும்போது பின்னால வந்து முட்டிய கழட்டி விட்டுடரது, கரையில நின்னு கயிரு புடிக்கறவன் அப்பிடியே விட்டுட்டு போகறது, தண்ணிப் பாம்புகளுக்கு நடுவுல குதிக்கறது, அது கடிச்சுதுன்னா கடிச்ச எடத்துல சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு மறுபடி குதிக்கிறது, தண்ணிக்குள்ளார போய் அடுத்தவன் அண்ட்ராயர அவுக்கறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். ஒரு பெரிய மூங்கில போட்டு ரெண்டு மூணு பேர அத புடிச்சுக்கிட்டே கத்துக்கிட்டு இருப்பாங்க. அந்த மூங்கிலோட ஒரு பக்கமா போய் நாலு பசங்க தொங்குவானுங்க. கத்துக்குட்டிகள்லாம் அலறுரதை பாக்கரதுல தனி சொகம்.

நீச்சல் கத்துகிட்டப்பறம் ஊர்ல ஒரு கெணறு, வாய்க்கால், ஏரி, கொளம், குட்டைன்ன்னு எதயும் விட்ரதில்ல. எங்கியாவது ஒரு ஆள் ஆழத்துக்கு தண்ணி தேங்கியிருந்தா போதும். ஒடனே வானரங்க குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சுரும். ஒரு நாளைக்கு பத்து தடவ ஒரே ட்ராயரயும் சட்டயயும் காயவெச்சு காயவெச்சு போட்டா 'எலி எதாவது நம்ம சட்டப் பாக்கெட்டுக்குள்ளயே செத்து போய் இருக்கா'ன்னு மத்தவங்களுக்கு சந்தேகம் வர அளவுக்கு நம்ம மேலேருந்து ஒரு "வாசனை" கிளம்பும். வீட்டுக்குள்ள நொழயும்போது நமக்கு முன்னாடி நம்ம 'வாசனை' போகும். லட்சார்ச்சனை ஆரம்பிக்கும். நாம அப்பிடி எதுவுமே நடக்காத மாதிரி நேரா பின்பக்கம் போயி ஒரு குளியலப் போட்டுட்டு அப்பிடி பரிதாபமா ஒரு பார்வை பாத்துட்டு, தட்டுல விழறதை சாப்டுட்டு மறுபடி க்ரவுண்டுக்கு ஜூட்...அதுதான் நீங்க மொத பாகத்துல படிச்சுருப்பிங்களே...

இந்த சமயத்துலதான் சித்தப்பா ஒருத்தரு நமக்கு சங்கீதத்தை அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அதப் பத்தி....

இன்னும் மொளைப்போம்...

14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

வாய்க்கா சமாசாரம் நல்லா இருக்கு...... கத்தாழை முட்டி உங்களுக்கு கெடச்சு இருக்கு.... பரவாயில்லை..... எங்க அண்ணன் சும்மா அல்ல, முக்கிவிட்டான் நம்மளை....படுபாவி....

ஜோசப் பால்ராஜ் said...

கத்தாழ முட்டியா, இப்டியெல்லாம் நீச்ச கத்துத் தர்றாங்களா உங்க பக்கம்? எங்களயெல்லாம் அப்டியே தூக்கி ஓடுற ஆத்துல போட்ருவாய்ங்க, கையக்கால அடிச்சு ஏறி வாடான்னு. நாங்களும் தண்ணிய முழுங்கி, கையக்கால அடிச்சு ஏறிடுவோம். அப்டியே எவனாவது ரொம்ப தண்ணிய குடிச்சுட்டு முழுகுறான்னா, சடாருனு பாய்ஞ்சு தலை முடியப் புடிச்சு தூக்கிருவாங்க. ரெண்டாம்ப்பு முடிச்சுட்டு மூணாம்ப்பு போற கோடை விடுமுறையிலயே நானெல்லாம் நீச்ச கத்துக்கிட்டேன். அப்றம் ஓடுற தண்ணீல எதிர் நீச்ச போட்டோம் , அதுதான் இன்னைக்கும் வாழ்க்கையில எதிர் நீச்ச போட ரொம்ப உதவுது.

Mahesh said...

@ பழமைபேசி :

வழக்கம் போல மொத போணி... நன்றி.... உங்க அண்ணன் நொம்ப நல்லவரு போல...

Mahesh said...

@ ஜோசப் :

நாங்கள்லாம் ரொம்ப தைரியம்... அதனாலதான் இந்த மாதிரி சில்லற மேட்டரெல்லாம் பின்னால கத்துக்கிடலாம்... எங்க போயிறப் போகுதுன்னு விட்டுட்டோம்.... :))

புதுகை.அப்துல்லா said...

ரொம்ப ஆழம் கூட
//

ஓஹோ..கவுண்டர் வீட்டம்மா மனசு மாதிரி(பெண் மனசு ஆழமில்லையா)
:)

புதுகை.அப்துல்லா said...

அவுரு மிலிட்டரியில இருந்தபோதே பெரிய நீச்சல் வீரர்
//

ஆஹா! மெக்கானிக்கல் இஞ்னீரு படிச்சு போட்டு அப்புறம் அட்வர்டைசுமண்டு போயி பின்னாடி கம்பூட்டர் இஞ்னீரு ஆயி அப்புறம் பேங்கு வேலைக்கு வந்து....இப்படி வாழ்க்கையில் நீங்க எதிர் நீச்சல் போட்டு முன்னேருனதுக்கு அதுதான் காரணமா?

புதுகை.அப்துல்லா said...

நமக்கா தண்ணிய பாத்தாலே ஒடம்பு மரக்கட்ட மாதிரி வெறச்சுக்கும்.
//

குவாட்டரப் பார்த்தா?

புதுகை.அப்துல்லா said...

ஆனா நான் கடசி வரைக்கும் எங்க அப்பா கிட்ட கத்துக்கவே இல்ல.
//

எந்தக் காலத்துல நம்ப அப்பய்ங்க பேச்சக் கேட்டோம்?

புதுகை.அப்துல்லா said...

தண்ணிக்குள்ளார போய் அடுத்தவன் அண்ட்ராயர அவுக்கறதுன்னு ஒரே களேபரமா இருக்கும்.
//

நமக்கு பலவாட்டி டவுசர கழட்டிருக்காய்ங்க அண்ணே :)

புதுகை.அப்துல்லா said...

இந்த சமயத்துலதான் சித்தப்பா ஒருத்தரு நமக்கு சங்கீதத்தை அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அதப் பத்தி....

//

அட சாமி! அதுவேறயா?

சரி,சரி சீக்கிரம் வந்து அதையும் சொல்லுங்க.

Mahesh said...

@ அப்துல்லா :

வாங்கண்ணே... அது எப்பிடிங்க டக் டக்குன்னு எசப்பாட்டு பாடறீங்க... ரொம்ப கிரியேடிவான ஆளுதான்... பரிசலார் பக்கத்துல உங்க ஃபோட்டோ பாத்தேன். ஸ்மார்ட்டா இருக்கீங்க

அப்பறம் அந்த க்வார்ட்டர் மேட்டரு... நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரமுங்க...

புதுகை.அப்துல்லா said...

பரிசலார் பக்கத்துல உங்க ஃபோட்டோ பாத்தேன். ஸ்மார்ட்டா இருக்கீங்க
//

அண்ணே! கவிதைக்கு மட்டும்தான் பொய் அழகு. பின்னூட்ட பதிலுக்கு அல்ல..

Mahesh said...

@ அப்துல்லா :

ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்.... புதுக்கோட்டைக் காரங்களே இப்பிடித்தான்...

DHANS said...

நம்ம ஊர்ல எல்லாம் கத்தாளை எல்லாம் இல்லங்க, நல்ல காய வச்ச முருங்க கட்டை மட்டும் தான், நல்ல காய வச்ச சொரக்காய் (சொரக்குடுக்கை நு சொல்வோம்) கூட உபயோகிப்போம் அனா சொரக்காய் என்கிறது இடிச்சு ஒடஞ்சு போய்டும் அதனால நம்ம பேசல் முருங்க கட்டை தான். அத கட்டிக்கிட்டு மேல இருந்து குதிக்கும் பொது கட்டின கயிறு இடுப்ப இருக்கும் இருந்தும் அது ஒரு ஆனந்தம் தான்.